"திமுக-வின் சதி முறியடிப்பு: 90 லட்சம் போலி வாக்குகள் நீக்கம்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
திமுகவின் கள்ள ஓட்டு கனவு மண்ணோடு மண்ணானது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்து, இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வாக்காளர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் மிக முக்கியமான வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள வரைவுப் பட்டியலில் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இது குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஆரம்பம் முதலே அஇஅதிமுக எதற்காக இந்த SIR கணக்கீட்டை வலியுறுத்தியதோ, அதன் அவசியம் இப்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. எந்தப் போலி வாக்குகளை வைத்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என திமுக கனவு கண்டதோ, அந்தக் கனவு இப்போது மண்ணோடு மண்ணாகிவிட்டது. அந்த ஆத்திரத்தில்தான் திமுக நாடகங்களை அரங்கேற்றத் துடிக்கிறது," என்று சாடியுள்ளார்.
வரைவுப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். புதிய வாக்காளராக இணைய படிவம்-6 அல்லது இடம் பெயர்ந்து வாக்கு நீக்கப்பட்டிருந்தால் படிவம்-8 ஆகியவற்றை உரிய அடையாள அட்டைகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க: "இது திட்டமிட்ட கொலை; திமுக அரசுதான் முழு காரணம்" - நயினார் நாகேந்திரன் ஆவேசம்!
இப்பணிகளுக்கு அதிமுக-வின் BLA-2 பாக முகவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திமுக-வின் கட்டுக்கதைகளை நம்பி ஏமாற வேண்டாம். SIR பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட நிர்வாகிகளைப் பாராட்டிய அவர், அடுத்தகட்டமாகப் பின்வரும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்:
ஒவ்வொரு பூத் வாரியாக பழைய பட்டியலோடு, தற்போதைய வரைவுப் பட்டியலை ஒப்பிட வேண்டும். வாக்காளர்கள் சரியான காரணத்திற்காக (இறப்பு, இடமாற்றம், இரட்டை வாக்கு) நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். முறையான காரணமின்றி ஒருவரின் வாக்கு நீக்கப்பட்டிருந்தால், அவர் இல்லத்திற்கே சென்று படிவம்-6 / படிவம்-8 நிரப்பித் தரும் பணியை தலையாயக் கடமையாக செய்ய வேண்டும்.
மீதமுள்ள போலி வாக்குகள்: இன்னும் போலி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தால், அதிகாரிகளிடம் முறையிட்டு அவற்றை நீக்க வேண்டும். இப்பணிகளை மாவட்டக் கழகச் செயலாளர்கள் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் உண்மையான மக்களாட்சி மலர இதுவே அடித்தளம் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “விஜய் அருகில் நின்னா தூய்மை ஆகிடுவாங்களா?” – சிபிஐ வீரபாண்டியன் கேள்வி!