போராட்டக் களத்தில் எம்பி கனிமொழி..! மாணவர்களுக்கு ஆதரவு... பரபரக்கும் டெல்லி..!!
டெல்லியில் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்திற்கு கனிமொழி எம்பி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் நீட்-யூஜி 2026 தேர்வில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டம், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் தீவிரமடைந்தது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான பேரணியாகச் செல்ல முயன்றபோது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாணவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசி, தடியடி நடத்தி அவர்களைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது. சிறியவர்கள் உட்பட பல மாணவர்கள் காயமடைந்ததாகவும், போராட்டம் முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், நாடு முழுவதும் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இந்தச் சம்பவத்துக்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.கனிமொழி தனது எக்ஸ் பதிவில், மாணவர்கள் மீதான இந்த அடக்குமுறையை வன்மையாகக் கண்டித்தார்.
இதையும் படிங்க: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! தமிழகத்தின் முக்கிய கோரிக்கை..! செவி சாய்க்குமா கர்நாடகா...?
மத்திய பாஜக அரசு, முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அடக்குமுறை மற்றும் பலப்பிரயோகத்தைத் தேர்வு செய்துள்ளதாக அவர் சாடினார். கல்வி உரிமைக்காகப் போராடும் இளைஞர்களின் குரலை அடக்க முடியாது என்றும், நீட் தேர்வு அறவே ஒழிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியை ஜனநாயகத்துக்கு எதிரான செயலாக அவர் பார்த்தார். இந்த நிலையில் டெல்லியில் போராடிவரும் மாணவர்களுக்கு கனிமொழி எம்பி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்ட களத்திற்கு சென்று கனிமொழி தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: போராடினால் தேச துரோகியா..? போராட்டத் தீ பரவட்டும்... CPM சண்முகம் ஆவேசம்..!!