“முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத் கைவிடுக!” உப்பளத் தொழிலாளர்களுக்காக தேமுதிக அறிக்கை!
தூத்துக்குடி முல்லைக்காட்டில் கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி தேமுதிக சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முல்லைக்காடு பகுதியில் அமையத் திட்டமிடப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளத் திட்டத்தினால், பல்லாயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசுக்குத் தேமுதிக சார்பில் இன்று முக்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “கோவளம், பசுவந்தரை, தன்பாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதிக்கும் வகையில் இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. முல்லைக்காடு பகுதியில் சுமார் 160 தலைமுறைகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழில், அப்பகுதி மக்களின் ஒரே வாழ்வாதாரமாகும். கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட்டால், இந்த உப்பளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுத் தொழிலாளர்கள் வீதியில் நிற்கும் சூழல் உருவாகும்” எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "இந்திய விவசாயிகளை அமெரிக்காவிடம் அடகு வைக்காதீர்!" கனிமொழி எம்பி தூத்துக்குடியில் ஆவேசம்!
உப்பளத் தொழிலாளர்களின் நலன் கருதி, முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சிறு உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களுடன் அரசு வெளிப்படையான கலந்தாலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளை மதிக்க வேண்டும். தற்போது உப்பு விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், அதை நம்பியுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று வலியுறுத்தியுள்ளார்.
“பாரம்பரியத் தொழில்களைப் பாதுகாப்பதும், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதும் ஒரு மக்கள் நல அரசின் அடிப்படைப் பொறுப்பாகும். எனவே, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் எந்தவொரு தொழிற்சாலைக்கும் அனுமதி வழங்கக் கூடாது. மக்களின் உணர்வுகளை மதிக்கும் ஜனநாயக அணுகுமுறையைத் தமிழக அரசு பின்பற்ற வேண்டும்” எனத் தேமுதிக அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதாரத் தூண்களில் ஒன்றாகத் திகழும் உப்புத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல், தற்போது அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: தேமுதிக விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு தீவிரம்!