தரவேண்டிய நிதியை வழங்க ரெடியா? பிரதமர் கிட்ட பதில் இருக்கா? திமுக சரமாரி கேள்வி
தமிழகத்திற்கு மூன்று லட்சம் கோடி நிதி கொடுத்துள்ளதாக பிரதமர் பேசியதற்கு திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக, முதலாம் இராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இதனிடையே, தூத்துக்குடியில் பிரதமரின் பேச்சு தொடர்பான ஒரு விமர்சனத்தை திமுக முன்வைத்துள்ளது. 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ. 3 லட்சம் கோடி கொடுத்துள்ளோம் என தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேசியிருப்பதாகவும் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை, மாநிலங்களுக்கு வழங்கும் பங்களிப்புத் தொகை என ரூ.2.63 லட்சம் கோடி இன்னும் வராமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு உடனடியாக அதனை தமிழ்நாட்டிற்கு வழங்குமா எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிற்கு கூட பேரிடர் நிவாரணத் தொகையை இன்று வரை தராமல் ஏமாற்றி வருவதும் ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசுதான் என்று குற்றம்சாட்டிய திமுக, கல்விநிதி ரூ.2152 கோடியை தராமல் இழுத்தடித்து வருவதும் இதே ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு தான் என குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: வரலாற்றில் மோடி! இது உன்னதமான தருணம்... பிரதமரின் சோழ தேச வருகை குறித்து அண்ணாமலை பெருமிதம்
நூறு நாள் வேலை, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டமென பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம் என சுட்டிக்காட்டிய திமுக, மேலும் ஒன்றிய நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழ்நாடு தொடர்ந்து நிதி இழப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளது. 12 ஆம் நிதிக்குழுவில் 5.305% ஆக இருந்த நிதி ஒதுக்கீடு 15 ஆவது நிதிக்குழுவில் 4.079% ஆக குறைந்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கிடைக்க கூடிய ஆயிரக் கணக்கான கோடி ரூபாயை இழந்து கொண்டிருப்பதாக தெரிவித்தது. இதற்கெல்லாம் பிரதமர் பதில் சொல்வாரா எனவும் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழ்நாட்டின் சிலை! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு...