×
 

ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!!

பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

“மாற்றத்தைத் தருகிறேன்” என மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு, ஒரு மாத கால ஆட்சியிலேயே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். மாநிலம் முழுவதும் 6 முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுவதால் பொதுமக்கள், குழந்தைகள், வயதானோர் மற்றும் நோயாளிகளுடன் நள்ளிரவில் தெருக்களிலும் சாலைகளிலும் இறங்கி போராட்டம் நடத்தும் அவல நிலை உருவாகியுள்ளது.

செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பதவியேற்ற உடனே மாற்றம் கொண்டு வருவதாக பஞ்ச் டயலாக் பேசிய முதலமைச்சர் மவுனம் காத்து வருவதுடன், பத்திரிகையாளர்களையும் சந்திக்காமல் உள்ளார். மின்துறை அமைச்சரோ தினசரி புதிய சதி கோட்பாடுகளை முன்வைத்து, பிரச்னையைத் திசை திருப்ப முயல்வதாக அவர் விமர்சித்தார்.

“பியூஸ் கேரியரைத் திருடுகிறார்கள்” என சிசிடிவி வீடியோவைப் பகிரும் அமைச்சர், பகலில் நடக்கும் திருட்டால் இரவில் மின்வெட்டு ஏற்படுவதை எப்படி விளக்குகிறார் என செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பினார். பியூஸ் திருட்டால் மொத்த மின்சாரமும் தடைபட வேண்டும் என்பதை சாதாரண மக்களும் அறிவர். அடுத்து “ஹார்ட் டிஸ்குகள் மாயமாகின்றன” என்று கூறிய அமைச்சர், காவல்துறை விசாரணையில் அவற்றில் முக்கிய தகவல்கள் இல்லை என தெரிவிக்கப்பட்ட பின்னரும், அதை மின்வெட்டுக்குக் காரணமாகச் சொல்வது எப்படி என வினவினார். 

இதையும் படிங்க: இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

மூன்றாவதாக, “மின்வாரியப் பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” என தன் பணியாளர்கள் மீதே பழி சுமத்துவதாகக் குற்றம் சாட்டினார். “மக்களின் துயரை ரசிப்பவர்கள் போல பணியாளர்களை சித்தரிப்பது” தன் நிர்வாகத் திறமையின்மையை மறைக்கும் முயற்சி என செந்தில் பாலாஜி தாக்கினார். இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்களுக்கு உள்ளடக்கம் தயாரிப்பதில் கவனம் செலுத்தாமல், உண்மையான நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

திராவிட மாடல் ஆட்சியின் சாதனை: திராவிட மாடல் அரசு (2021-2026) காலத்தில் மின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபோதும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. 2021ல் 16,481 மெகாவாட் உச்ச தேவையாக இருந்தது 2022ல் 17,196 மெகாவாட்டாகவும், 2023ல் 18,053, 2024ல் 19,049, 2025ல் 20,148, 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட்டாகவும் உயர்ந்தது. சென்னையில் 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டபோதும் மின்வெட்டு ஏற்படவில்லை.இந்தியாவிலேயே மிகக் குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்தது. மத்திய அமைச்சரே இதைப் பாராட்டினார்.

2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு தடையில்லா மின்சாரம் உறுதி செய்யப்பட்டது. வருவாய்-செலவு இடைவெளி 5,000 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது. 90,000 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டன; பழுதடைந்தவை மாற்றப்பட்டன. துணை மின் நிலையங்கள், மின்வழித்தடங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டன.இப்போதைய அரசு மின் தேவை அதிகரிப்பைச் சரியாக நிர்வகிக்கத் தவறியுள்ளதாக செந்தில்பாலாஜி சுட்டிக்காட்டினார். 

அதிகாரிகளுடன் ரிவ்யூ மீட்டிங் கூட நடத்தாமல், பழி சுமத்தும் வேலையில் ஈடுபடுவதாக விமர்சித்தார். பயிர்கள் காய்ந்து விவசாயிகள் துயரப்படும் நிலை, பள்ளிகள் மூடப்படும் அவலம் ஆகியவை த.வெ.க. ஆட்சியின் “மாற்றம்” எனக் கேலி செய்தார். மு.க. ஸ்டாலின் கூறிய “பலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது” எனும் வார்த்தைகளை நினைவூட்டிய செந்தில்பாலாஜி, மின்வெட்டை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.வெ.க. அரசுக்கு வலியுறுத்தினார். ரீல்ஸ் கலாச்சாரத்தை விட்டு ரியாலிட்டிக்கு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க? தவெக அரசை வறுத்தெடுத்த செந்தில் பாலாஜி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share