பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க? தவெக அரசை வறுத்தெடுத்த செந்தில் பாலாஜி!
டாஸ்மாக் மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் தவெக அரசை 'ரீல்ஸ் ஆட்சி' என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பு கரூருக்கு வந்து வண்டியின் மீது ஏறி நின்று, டாஸ்மாக் விவகாரத்தில் எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசினார்கள், என்னென்ன பாட்டெல்லாம் பாடினார்கள்! ஆனால், இன்றைக்கு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு டாஸ்மாக்கில் எவற்றைக் கட்டுப்படுத்தி விட்டார்கள்? அன்று பாடிய பாட்டுக்கு இன்று தவெக அரசிடம் என்ன பதில் இருக்கிறது? என்று திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில் பாலாஜி அவர்கள் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி புதிய தவெக அரசின் ஒரு மாத காலச் செயல்பாடுகளைக் கடுமையாக விமரிசித்துத் தரைமட்டமாக்கினார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் காரசாரமாகப் பேசியதாவது:
திரையிலும், திரைப்படத்திலும் சும்மா வசனங்கள் பேசுவது மிக எளிது. ஆனால், அரசுப் பொறுப்பை ஏற்ற பிறகு மக்களின் அவசரத் தேவைகளை உணர்ந்து களத்தில் இறங்கிச் செயல்படுவதுதான் ஒரு முதலமைச்சரின் உண்மையான கடமை. தற்போதைய தவெக அரசோ, திராவிட முன்னேற்றக் கழகத்தை விமரிசிப்பதை மட்டுமே தங்களின் ஒரே குறியாகக் கொண்டுள்ளது.change (மாற்றம்) என்று கூறி, வெற்று கவர்ச்சியான பேச்சுகளால் மக்களிடம் ஓட்டுகளை வாங்கி ஏமாற்றியுள்ளனர். கல்வி, மருத்துவம், தொழில்துறையில் இவர்களா மாற்றம் செய்யப் போகிறார்கள்? ஏற்கனவே கல்வி மற்றும் மருத்துவத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில்தான் உள்ளது. மகளிருக்குத் தனிப் பாதுகாப்புப் படை அமைப்போம் என்று கூறிவிட்டு, தற்பொழுது மூன்று முறை அதைத் தள்ளிப் போட்டுள்ளீர்கள். சூலூரில் அண்மையில் நடைபெற்ற கொடூரமான சட்டம் ஒழுங்கு சம்பவமே இவர்களின் நிர்வாகத் திறமைக்குச் சான்று.
இதையும் படிங்க: கோட்டையில் இருப்பது தலைமை செயலகமா? தவெக ஆபீஸா? வானதி சீனிவாசன் அனல் பறக்கும் குற்றச்சாட்டு!
தொடர்ந்து மின்சாரத்துறை மற்றும் டாஸ்மாக் விவகாரங்களைச் சாடிய அவர், திமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கிக் கொடுத்தோம். ஆனால், தற்பொழுது பல இடங்களில் மின்சாரப் பற்றாக்குறையால் மக்கள் வீதிக்கு வந்து போராடி வருகிறார்கள். மின்சாரத் துறை அமைச்சர் உடனடியாக ஆய்வுக்கூட்டங்களை நடத்த வேண்டும். அதை விடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர், எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்த திட்டங்களையே தங்களது புதிய திட்டங்கள் போல ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துக் கொண்டிருக்கிறார். போதைப் பொருட்கள் விவகாரத்தில் எங்களுடைய முதல்வர் அப்பொழுதே தெளிவான விளக்கம் அளித்திருந்தார்; தற்போதைய அரசு அதற்கு என்ன அதிரடி முயற்சி எடுத்துள்ளது?
அதேபோல், தொழில்துறை அமைச்சர் சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' (Reels) போடுவதை விடுத்து, அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு முதலீடுகளை ஈர்த்துள்ளார், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக விளக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இது ஒரு வெற்று 'ரீல்ஸ் ஆட்சி'. இன்னும் ஒரு மாத காலம் இந்த லட்சண ஆட்சியை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். யோசிக்காமல் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, இப்போது அதை நிறைவேற்றக் கூட முயற்சி செய்யாமல் தவெக அமைச்சர்கள் ஓடி ஒளிவது நியாயமா? என்று வெளுத்து வாங்கினார். இறுதியாக, பாஜக-வில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அப்படி ஒரு தகவல் எனக்குத் தெரியவில்லை, அவ்வாறு ஆரம்பித்தால் அதைப் பற்றி அப்போது பேசுவோம் என்று செந்தில் பாலாஜி சுருக்கமாகப் பதிலளித்து நகர்ந்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!