புயலைக் கிளப்பிய மிசா விவகாரம்... "முதல்வருக்கு ஆணவப் பேச்சு"..! திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!
முதலமைச்சரின் விஜயை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையாக அவர் பேசியபோது, கடந்த திமுக ஆட்சிக் காலத்தைக் குறிப்பிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில் மிசா காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள், சர்க்காரியா ஆணைய அறிக்கை மற்றும் அமலாக்கத் துறையின் ஆவணங்கள் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றன.
இந்தப் பேச்சின் போது அவர் செய்த உடல் மொழி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கடந்தகால தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இருந்ததாக திமுக தரப்பு கடுமையாகக் கண்டித்துள்ளது.மு.க.ஸ்டாலின் அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, காவல்துறையினரின் தாக்குதலால் தாடை எலும்பு உடைந்தது என்பது அறியப்பட்ட வரலாறு. அந்தத் தியாகத்தை நினைவுகூர்ந்து பேசும்போது அதை கேலி செய்யும் வகையில் சைகை காட்டியதாக திமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
இது தனிப்பட்ட தாக்குதலாகவும், அரசியல் பழிவாங்கலாகவும் பார்க்கப்படுகிறது. திமுக தலைவர்கள் இதைக் கடும் கண்டனத்துக்குரிய செயல் என்று வர்ணித்துள்ளனர். ஆட்சியின் தோல்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்க முடியாமல், பழைய வரலாற்றைத் தோண்டி எடுத்து கொச்சையான முறையில் பேசுவதன் மூலம் தப்பிக்க முயற்சிக்கிறார் என்பதே அவர்களின் நிலைப்பாடு.சட்டப்பேரவையில் இந்தப் பேச்சு நடைபெற்றபோது திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க அனுமதி கோரினார்.
இதையும் படிங்க: யார் இந்த பரந்தாமன்? சுகன்யா? அதிமுக, தவெகவை எதிர்கொள்ள திமுகவின் அதிரடி தேர்வு! கசிந்தது இடைத்தேர்தல் ப்ளான்!
ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அடுத்த நாள் மீண்டும் இதே விஷயத்தை எழுப்பி பதிவுகளில் இருந்து நீக்கக் கோரி தர்ணா போராட்டம் நடத்தினர். சபாநாயகர் அதற்கு இணங்காததால் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தச் சம்பவங்கள் திமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.இந்தப் பின்னணியில், திமுக தலைமை முதலமைச்சர் விஜயின் பேச்சைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 12ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. முதலமைச்சரின் விஜயின் ஆணவ பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெற்றிக் கனியை தலைவருக்கு சமர்ப்பணம்... 2 தொகுதியிலும் திமுக தான்..! வேட்பாளர் பரந்தாமன் உறுதி..!!