ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!
சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு நாள்தோறும் வெளியாகும் கொலை மற்றும் குற்றச் செய்திகள் போதுமான சாட்சியாக இருக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான் ஒரு அரசின் அடிப்படைக் கடமை என்பதை வலியுறுத்திய அவர், குற்றங்களைத் தடுப்பதற்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பதிலாக எதிர்க்கட்சியைத் தாக்குவதற்கான வசனங்களைத் தயாரிப்பதிலேயே இந்த அரசும் முதலமைச்சரும் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது எனக் குற்றம் சாட்டினார்.
சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரத்தில் பழைய அவதூறுகளைத் தூசி தட்டி எடுப்பது இன்றைய தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது என்று தங்கம் தென்னரசு மேலும் தெரிவித்தார். கருணாநிதி வாழ்ந்த காலத்தில் அவர் மீது வீசப்பட்ட அதே பழைய அவதூறுகளை இன்று அரசியலுக்கு வந்துள்ள புதியவர்களும் பயந்து கையில் எடுக்கிறார்கள் என்றால் கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என அவர் விளக்கினார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கழகத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் மிசா சிறைக் கொடுமையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவர் என்று நினைவுகூர்ந்த அவர், ஜனநாயகம் என்றால் என்ன என்பதைத் தனது போராட்ட வரலாற்றால் நிரூபித்த இயக்கம் தி.மு.க. என்று பெருமையுடன் குறிப்பிட்டார். ஆனால் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எங்கே அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில் அவருடன் நேரடியான விவாதத்தையே தவிர்க்கும் அளவுக்கு ஜனநாயகம் பாதாளத்திற்குப் போய் விட்டது என தங்கம் தென்னரசு வருத்தம் தெரிவித்தார்.அரசு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அடிப்படைப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், அதற்குப் பதிலாக அரசியல் தாக்குதல்களிலேயே கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய சூழல் தமிழ்நாட்டின் ஜனநாயக மதிப்புகளையும் சட்டம் ஒழுங்கையும் மேலும் பாதிக்கும் என்ற அச்சத்தை வெளிப்படுத்திய அவர், அரசு தனது கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!
இதையும் படிங்க: சர்க்காரியா கமிஷன்..! விவாதிக்க தெம்பு, திராணி இருக்கா.? முதல்வருக்கு ஆர். எஸ். பாரதி சவால்.!!