பட்ஜெட் எதிரொலி..! தமிழ்நாடு அரசின் இரண்டாவது பொருளாதாரம் அறிக்கை இன்று வெளியீடு..!
தமிழக அரசின் இரண்டாவது பொருளாதார அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியாக இருப்பது மாநில அரசின் பொருளாதார நிலவரத்தைப் புரிந்துகொள்ள மிக முக்கியமான நிகழ்வு. இந்த அறிக்கை மாநில திட்டக்குழு மற்றும் நிதித்துறை இணைந்து தயாரித்தது. முதல் ஆய்வறிக்கை கடந்த ஆண்டு வெளியானபோது அது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமிதத்துடன் விவரித்தது.
தொடர்ச்சியாக 8 சதவீதத்துக்கும் மேல் வளர்ச்சி பதிவாகியிருப்பதாகவும், சில ஆண்டுகளில் இரட்டை இலக்க வளர்ச்சி கூட சாத்தியமாகியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக 2024-25 நிதியாண்டில் 11 சதவீதத்துக்கும் மேல் வளர்ச்சி என்று சில மதிப்பீடுகள் வெளியாகியிருந்தன. தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகத் தொடர்வது, தனிநபர் வருமானத்தில் முன்னிலை வகிப்பது, தொழில்துறை மற்றும் சேவைத்துறை வளர்ச்சி ஆகியவை முக்கிய இடம் பெற்றிருந்தன.
இரண்டாவது அறிக்கை இப்போது வெளியாக இருப்பதால், கடந்த ஒரு ஆண்டில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிய சவால்கள், தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், பசுமைத் தொழில்கள், பெண்களின் பொருளாதார பங்கேற்பு போன்றவை மேலும் விரிவாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கலாம். மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாடு பசுமை சார்ந்த தொழில்துறை வளர்ச்சிக்கு முன்மாதிரி மாநிலமாகக் குறிப்பிடப்பட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்பீடு காட்டும் திமுக... அண்மையில் கட்சியில் இணைந்தவர்களுக்கு பொறுப்பு..!
மாநில அரசு இதைத் தன் அறிக்கையில் எப்படி விரிவாக்கி, தன் சாதனைகளை முன்னிலைப்படுத்தும் என்பது ஆர்வத்தை எழுப்புகிறது. இந்த ஆய்வறிக்கை இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்னோட்டமாக அமையும். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவிருக்கும் இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு இது அடிப்படைத் தகவல்களை வழங்கும். பொருளாதார வளர்ச்சி விகிதம், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள், துறைசார் பங்களிப்புகள், வருவாய்-செலவு நிலைமைகள் ஆகியவை இதில் இடம்பெறும். கடந்த ஆண்டு போலவே, திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி சார்ந்த கொள்கைகள், சமூக நலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு முதலீடுகள் ஆகியவற்றின் தாக்கத்தை இந்த அறிக்கை வலியுறுத்தும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: உச்சி வெயில்ல தான் கூட்டம் நடத்தணும்...! TVK மீட்டிங்கிற்கு போலீஸ் கெடுபிடியா? நடந்த உண்மை என்ன?