×
 

மேகமலை மக்களை வெளியேற்ற கூடாது! தேனியில் DYFI அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!

மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராம பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றுவதைக் கைவிட வலியுறுத்தி DYFI அமைப்பினர் தேனியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் பழங்குடியின மற்றும் பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்ற முத்திரையைக் குத்தி, நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் கொடூர நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (DYFI) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேகமலை மற்றும் வருசநாடு வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வுரிமையை அடியோடு பறிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் DYFI தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் ஒரு உத்தரவை மட்டும் சாக்காக வைத்துக்கொண்டு, சுமார் 5,072 ஏக்கர் வன நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி, அப்பகுதியில் காலங்காலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களைத் தமிழக அரசு, ஒன்றிய அரசு மற்றும் துணை ராணுவப் படைகளின் துணையோடு வலுக்கட்டாயமாக வெளியேற்றத் துடிப்பது முற்றிலும் ஜனநாயக விரோதமானது என்றும், இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் போராட்டக் களத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் போது ஆவேசமாக உரையாற்றிய சங்கத்தின் நிர்வாகிகள், புலிகள் சரணாலயம் என்ற மாயையான காரணத்தைக் காட்டி எளிய மக்களை வாழிடங்களிலிருந்து விரட்டப் பார்க்கிறார்கள்; ஆனால் அங்குப் புலிகளோ அல்லது எலிகளோ கூட இல்லாத ஒரு நிலப்பரப்பைச் சரணாலயம் எனப் பொய்யாகச் சித்தரிப்பதாக அம்மக்களே வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர். எனவே, அரசு தரும் ஒருதலைப்பட்ச அறிக்கைகளை நம்பாமல், உச்ச நீதிமன்றமே நேரடியாக ஒரு நடுநிலையான உண்மை அறியும் நிபுணர் குழுவை அனுப்பி மேகமலையில் முழுமையான கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

மேலும் கடந்த கால நிர்வாக அலட்சியத்தைச் சுட்டிக்காட்டிய அவர்கள், 2006-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வன உரிமைச் சட்டத்தின்படி, அங்கு வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களுக்கு இந்நேரம் முழுமையான நிலப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மக்களுக்குப் பட்டா தராமல் திட்டமிட்டு வஞ்சித்துவிட்டு, தற்போது கையில் பட்டா இல்லை என்று கூறி அவர்களை வேரோடு பிடுங்கி எறியத் துடிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? எக்காரணம் கொண்டும் மேகமலை, வருசநாடு பூர்வகுடி மக்களை வெளியேற்ற DYFI அனுமதிக்காது; மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று நாட்டின் தலைநகர் டெல்லியிலும் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது என்று எச்சரித்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு! உப்பளங்களில் கருப்புக்கொடி ஏந்தி தொழிலாளர்கள் போராட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share