பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தவெக அரசு கைவிட்டு மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அவசர அவசரமாகப் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். புனித ஜார்ஜ் கோட்டையில் நிலவும் இடநெருக்கடி காரணமாக நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், பொதுமக்களுக்கும் அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடத்தை அவசரகதியில் தேர்வு செய்வது ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும், எதிர்கால உள்கட்டமைப்பு வசதிகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மாற்று இடத்தை உடனடியாகத் தேர்வு செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அறிவித்திருந்ததை அடுத்து, பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள டிடிவி தினகரன், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு இதுவரை அரசாணைகள் வெளியிடப்படாத நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை மட்டும் அவசரமாகத் தேர்வு செய்து அரசாணை வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘தவெக அல்ல.. தற்குறி வெற்றிக் கழகம்!’ விளாசிய டிடிவி தினகரன்.. பரபரப்பை கிளப்பிய பேச்சு!!
குடியிருப்புகள் நிறைந்த பட்டினப்பாக்கம் பகுதியில் குறுகிய சாலைகளே உள்ளதால், அங்கு தலைமைச் செயலகம் அமைந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ள இப்பகுதிக்கு அரசு அலுவலர்களும் பொதுமக்களும் வரும்போது பாதுகாப்புப் பிரச்சினைகள் எழும் என்றார். குறிப்பாக, தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம் மீனவர்களின் பாரம்பரிய பயன்பாட்டில் உள்ள நிலம் என்பதால், அவர்களின் கோரிக்கையைக் கேட்காமல் அங்கு தலைமைச் செயலகம் அமைப்பது மீனவர்களின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் சர்வாதிகார நடவடிக்கை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் செய்த தவறுதான் விஜய் முதல்வரானது! சங்கரன்கோவிலில் டிடிவி தினகரன் பேட்டி!