அடிதூள்...!! - இவர்களுக்கு நிவாரணம் ரூ.12,000 ஆக உயர்வு...இபிஎஸ் புதிய தேர்தல் வாக்குறுதி...!
மீனவ மக்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் நிவாரண நிதி உயர்த்தினோம். இப்போது 8 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள், அந்த தொகை அதிமுக ஆட்சி அமைந்ததும் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தடாபெரும்பாக்கம், பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எழுச்சியுரை மேற்கொண்டார்.
அப்போது இபிஎஸ் பேசியதாவது: மின்கட்டணம், வரி உயர்வு, குப்பைக்கும் வரி, வரிமேல் வரி போடும் அரசு வேண்டுமா? வாக்குறுதி நிறைவேற்றவில்லை, எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டக்களமாகிவிட்டது. மக்களை ஏமாற்றும் ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல். கொரோனா காலத்தில் விலைவாசி உயரவில்லை, ஓராண்டு விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், ஆயிரம் ரூபாய் கொடுத்தோம், தைப்பொங்கல் அன்று 2500 ரூபாய் கொடுத்தோம். அற்புதமான ஆட்சி கொடுத்தோம். மாணவர்கள் மன உளைச்சலில் இருந்தனர், ஆல்பாஸ் போட்டோம். மாணவர்கள் குறைகளையும் போக்கினோம்.
ஏரி குளம் குட்டை குடிமராமத்து திட்டம் மூலம் தூர் வாரினோம். விவசாயத்துக்கு, குடிப்பதற்கு தேவையான நீர் கொடுத்தோம். மும்முனை மின்சாரம் கொடுத்தோம். ஒரே ஆண்டில் இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம். நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்துகொடுத்தோம்.
இதையும் படிங்க: காவிச் சிந்தனையில் பழனிச்சாமி... வள்ளுவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? கிழித்து தொங்கவிட்ட செல்வப் பெருந்தகை..!
7.5% இடஒதுக்கீடு, ஏழை அரசு பள்ளியில் படிக்கிறார்கள், அவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க இடஒதுக்கீடு கொடுத்தோம். 3 ஆயிரம் பேர் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் மருத்துவம் படித்தனர். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி, 68 கலை கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம், 4 பொறியியல் கல்லூரி, 4 வேளாண்மை கல்லூரி, 7 சட்டக்கல்லூரி ஏழை மாணவர்களுக்கும் பட்டப்படிப்பு படிக்கும் சூழல் உருவாக்கினோம்.
இளைஞர்கள் சிந்திக்க வேண்டும், யார் யாரோ புதுப்புது கட்சி நடத்துகிறார்கள். அவர்களா இதெல்லாம் செய்தார்கள்? ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு சூழல் உருவாக்கி தந்தது அதிமுக. கல்விச்செல்வம் அழியாச்செல்வம், உயிர் இருக்கும் வரை ஒரே செல்வம் கல்வி செல்வம். அதை கொடுத்தது அதிமுக அரசு. இளைஞர்கள் அதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் தே.ஜ.கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மீனவ மக்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் நிவாரண நிதி உயர்த்தினோம். இப்போது 8 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள், அந்த தொகை அதிமுக ஆட்சி அமைந்ததும் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற நற்செய்தியை சொல்லிக்கொள்கிறேன். அதிமுக வேட்பாளர் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால் அவர்களின் சின்னத்துக்கும் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின். வந்திருக்கும் அனைவரும் பாதுகாப்பாக வீடுபோய் சேர வேண்டும் எனக்கூறி உரையை முடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: திருவள்ளுவருக்கு காவி உடையா..?? இபிஎஸ்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!! கொந்தளித்த திருமாவளவன்..!!