×
 

எந்த ஸ்கூலையும் இனி PT Period கட் ஆகாது..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

தமிழகத்தில் உள்ள எந்தவொரு பள்ளியிலும் உடற்கல்விக்கான ‘பிடி பீரியட்’ (PT Period) இனி ரத்து செய்யப்படக் கூடாது என்று செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கல்வி மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் ராஜ்மோகன், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பல், உடற்கல்வி வகுப்புகள் பாதுகாப்பு, மலைக்கிராம மாணவர்களின் கல்வி வசதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை அவர் எடுத்துரைத்தார்.

அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், “தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை எந்தவித சட்ட சிக்கல்களும் இன்றி விரைவாக நிரப்ப அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) மூலம் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

மாணவர்களின் உடல் நலனையும் விளையாட்டுத் திறனையும் மேம்படுத்தும் வகையில் முக்கிய உத்தரவு ஒன்றை அவர் பிறப்பித்தார். “ஒவ்வொரு பள்ளியிலும் வாரத்துக்கு ஒதுக்கப்படும் பாடவேளைகளில் 8 பீரியட்கள் உடற்கல்வி மற்றும் இதர செயல்பாடுகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். எந்தப் பள்ளியிலும் பிடி (Physical Education) பீரியட்டை குறைக்கவோ, ரத்து செய்யவோ கூடாது. இது அரசின் அதிரடி உத்தரவாக இருக்கும்” என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

தமிழக மாணவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதே அரசின் நீண்டகால இலக்கு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதற்காக மாநில அளவில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், பயிற்சி மையங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மலைக்கிராமங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்ய அரசு உறுதியாக உள்ளது. போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி, அந்தப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு தொடர்ந்து வர முடியும் என்றார்.

பத்திரிகையாளர்களின் நலன் குறித்தும் அமைச்சர் உறுதியளித்தார். “பத்திரிகையாளர்களின் நீண்டகால கோரிக்கைகளான வீட்டுமனைப் பட்டா, அக்ரிடேஷன் கார்டு மற்றும் பிரஸ் கார்டு வழங்குவதில் உள்ள நிலுவைப் பிரச்சினைகள் அரசியல் தலையீடு இன்றி, தகுதியின் அடிப்படையில் விரைவில் தீர்க்கப்படும்” என்று அவர் உறுதி அளித்தார்.

மேலும், பல மாத இடைவெளிக்குப் பிறகு கோயம்புத்தூரில் அரசுப் பொருட்காட்சி வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளதைப் பாராட்டிய அமைச்சர், பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்கு, உணவு மற்றும் கல்விச் சார்ந்த அனுபவங்களைப் பெறுமாறு அழைப்பு விடுத்தார்.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் படிப்படியாக அமைக்கப்பட்டு வருவதாகவும், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அமைச்சர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புகள் தமிழக கல்வித் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்! அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share