×
 

அதிரடி உத்தரவு வெளியிட்ட மின்வாரியம்: தலைமை அலுவலகத்தில் நாளை முதல் அதிகாரிகள் கட்டாய ஆஜர்..!!

புதிய விடுப்பு விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும் என்றும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களது பல ஆண்டுகால நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகளைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இந்தப் போராட்டம் கோடைக்கால மின் தேவை உச்சத்தில் இருக்கும் நேரத்தில் ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நிதிச் சுமையில் தவித்துவரும் மின்வாரியத்துக்கு இந்த வேலைநிறுத்தம் கூடுதல் சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில், மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தடையின்றி தொடர உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

மின்வாரியத்தின் உயர் அதிகாரிகள் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்கள் (Superintending Engineers) மற்றும் செயல் பொறியாளர்கள் (Executive Engineers) நாளை முதல் தங்களுக்குரிய தலைமையக அலுவலகங்களில் கட்டாயம் ஆஜராக வேண்டும். அவசர மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே விடுப்பில் சென்றுள்ளவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், புதிய விடுப்பு விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும் என்றும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

மேலும், மின்வாரிய வளாகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதான நுழைவாயில்களில் தீவிரக் கண்காணிப்பு நடைபெறுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆலை வளாகத்திற்குள் நுழையவோ, அங்கு கூடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தியை 24 மணி நேரமும் தொடர்ச்சியாகக் கண்காணித்து, விநியோகத்தில் எந்தவிதமான தொய்வும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு அனைத்து பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மின்வாரியத்தில் டிரான்ஸ்பர் மற்றும் நிர்வாக மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட குழப்பத்துக்கு மத்தியில் இந்த வேலைநிறுத்தம் எழுந்துள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு மற்றும் போராட்டக் குழுவினரிடையே உடனடியாக சுமூகப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

மின்சாரம் என்பது அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவை என்பதால், இந்தப் போராட்டத்தின் தாக்கம் விவசாயம், தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளையும் பாதிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. மின்வாரிய நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் தற்காலிகமாக மின் விநியோகத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க: அடிக்கடி ஏற்படும் மின்தடை! அல்லல்படும் மக்கள்! மின் வாரியம் புதிய திட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share