கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
அரசு கல்லூரிகளில் 6,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் மற்றும் ஊதிய உயர்வு அறிவிப்புகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு கல்லூரிகளில் 6 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற உயர்கல்வித்துறையின் அறிவிப்புக்கும், கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விலக்கு தொடர்பான சட்டப்பேரவைத் தீர்மானத்திற்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மனமார்ந்த வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்க கூடுதல் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தில் உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறைகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்துக் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிதாக 6,000 உதவிப் பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்படுவர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; மாணவர்கள் நலன் கருதி இந்த நியமனங்களை அரசு மிக விரைவாகச் செய்து முடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: அரிசி, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்துக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!
மேலும், அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.35 ஆயிரமாகவும், பாலிடெக்னிக் பகுதிநேர விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டிருப்பதை வரவேற்கும் அதேவேளையில், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இந்த ஊதிய உயர்வை அரசு மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, விரிவுரையாளர்களின் பணி நிலைமைகள் குறித்துப் பேசிய அவர், பல கல்லூரிகளில் கௌரவ மற்றும் பகுதிநேர விரிவுரையாளர்களுக்கு ஆண்டுக்கு 7 முதல் 8 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் சூழலை மாற்றி, முழுமையாக 12 மாதங்களுக்கும் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், பெண் விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தல்களை உடனே நடத்திட வேண்டும் எனவும், உயர்கல்வி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.20 லட்சம் வரையிலான பிணையற்ற கல்விக் கடனை எவ்வித நிபந்தனைகளும் தடையுமின்றி வட்டியில்லாக் கடனாக வழங்கிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ள 6-ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) கல்வித் திட்டம் மற்றும் 2,771 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமன அறிவிப்புகளுக்கு பாராட்டு தெரிவித்த வீரபாண்டியன், அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, 2010 ஆகஸ்ட் 23-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து (TET) நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 3.28 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் எனச் சுட்டிக்காட்டிய அவர், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உடனடியாக உரிய திருத்தங்களை மேற்கொண்டு இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய பாஜக அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மாநில உரிமைகள் பறிப்பு! புதிய கனிமவள சட்டத்திருத்தத்திற்கு எதிராக களமிறங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!