"போதை மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாறிய தமிழ்நாடு".. NDA கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்... EPS அறிவிப்பு..!!
திமுக அரசை கண்டித்து NDA கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதாகவும் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, வரும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
2021-ஆம் ஆண்டு, ஸ்டாலின் தமிழ் நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திமுக-வினுடைய விடியா ஆட்சியில் தமிழ் நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது என்றும் தமிழ் நாட்டின் தெருக்களில் கஞ்சா புழக்கம் இல்லாத இடமே இல்லை என்கிற நிலையை திமுக அரசு உருவாக்கி இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வேதனையோடு சொல்வதென்றால், கல்லூரி மாணவர்களும், மாணவிகளும், பள்ளிக்கூட மாணவ மாணவிகள்கூட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மிகச் சாதாரணமாக பயன்படுத்துகிற செய்திகள் வெளி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!
தாலிக்கு தங்கம் திட்டம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறுத்தியதாக திமுக மீது அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. பால் வரி, தண்ணீர் வரி, மின் கட்டண உயர்வு என பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருவதாக கூறியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் 17ஆம் தேதி திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் என் டி ஏ கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!