ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நடிகர் ரஜினிகாந்த் குறித்த தவெக நிர்வாகியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இன்று எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூத்த நிர்வாகி ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்துப் பேசிய கருத்துகள் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார், அன்புச் சகோதரர் திரு. ரஜினிகாந்த் அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது என அவர் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு பெரும் ஆளுமை ரஜினிகாந்த் என்றும், அவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர் என்றும் ஈபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலுக்கு வருவதும் வராமல் இருப்பதும் ஒவ்வொரு தனிமனிதரின் உரிமை. அதற்கான காரணத்தை ரஜினிகாந்த் ஏற்கனவே விளக்கிவிட்ட நிலையில், அதை அரசியல் லாபத்திற்காகத் தவறாகச் சித்தரிப்பது அரசியல் நாகரிகமற்ற செயல் என அவர் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! தவெக-வினர் வைத்திருந்த பரிசு பொருட்கள் பறிமுதல்!
கடந்த சில நாட்களுக்கு முன் தவெக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுக குடும்பத்தினர் கொடுத்த மிரட்டல் காரணமாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றும், தற்போது அவர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனப் படங்களில் நடித்து வருகிறார் என்றும் பேசியிருந்தார். ரஜினிகாந்தின் அரசியல் துணிச்சலைக் கேள்வி எழுப்பிய இந்தப் பேச்சு, அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக - அதிமுக இடையே நிலவும் இந்த மோதல், அரசியல் களத்தில் புதிய சமன்பாடுகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் வந்தால் கெயினர்! வராவிட்டால் லூசர்! அதிமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் அதிரடி பேச்சு!