மீண்டும் 2.0 ஆட்சியா? அவரு 23ஆம் புலிகேசி..! காதில் பூ சுற்றும் ஸ்டாலின்... EPS விமர்சனம்..!
மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி என முதலமைச்சர் ஸ்டாலின் காதில் பூ சுற்றுவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றாமல், மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அல்வா கொடுப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 'ஆனைக்கு அறம்' என்றால் 'குதிரைக்கு குர்ரம்' என்று சொல்வதையும், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்-கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்' முதல்வர் ஸ்டாலின் வாடிக்கையாகக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும் கார்பன் காப்பி அடிக்கத் தொடங்கியிருப்பது, விலா நோக சிரிக்க வைக்கிறது என்றும் கூறினார். 2021 தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் அளித்த 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றவில்லை என்ற உண்மையை, மக்களுக்கு நாங்கள் நாள்தோறும் சொல்லி வருகிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முறையாக திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கத் தவறிய திராணியற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசு, தங்களுடைய இயலாமையை, தோல்வியை மறைக்க, மத்திய அரசு போதிய நிதியை தமிழகத்திற்கு தரவில்லை., ரயில்வே திட்டங்கள் வரவில்லை என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களுக்கு நிஜமாக அல்வா கொடுக்கும் பம்மாத்து வேலையை அரங்கேற்றி வருகிறது என்று கூறினார். திமுக-வின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும் என்றெல்லாம் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருகிறார் ஸ்டாலின் என்று விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதன்முறை..! 14 கோடி மதிப்பிலான கடல் ஆமை மையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!
'பேஸ்மென்ட் வீக் - பில்டிங் ஸ்டிராங்' என்று ஒரு படத்தில் வரும் நகைச்சுவை காட்சியைப் போல, இவருடைய ஆட்சியே ஆட்டம் கண்டு இன்றோ, நாளையோ என்று ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுக்கொண்டு, கண்ணாடி முன் நின்று வெற்றி, வெற்றி என்று இம்சை அரசின் 23ம் புலிகேசி போல் ஸ்டாலின் கூக்குரல் இட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, தமிழக மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள் என்று தெரிவித்தார். ஸ்டாலின் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல., வெறும் '0'தான் என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: கன்னிமாராவில் கார்ல் மார்க்ஸ்... முழு உருவச் சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!