திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு தீவிரம்..! கிரிஷ் ஜோடங்கர் கொடுத்த ஹிண்ட்..!
திமுகவுடன் இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் தொகுதி பங்கிட பேச்சுவார்த்தை நடக்கும் என கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து கூட்டணியில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் மிக முக்கியமான அம்சமாக உள்ளது. இந்தக் கூட்டணி 2019 மக்களவைத் தேர்தலில் இருந்து வலுவாகத் தொடர்ந்து வருவதுடன், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முக்கிய அங்கமாக காங்கிரஸ் செயல்பட்டது.
அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவற்றில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாகவே 2026 தேர்தலிலும் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது உறுதியாகி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, திமுக தலைமை மற்றும் காங்கிரஸ் மேலிடம் இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
குறிப்பாக, திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியது மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இந்த சந்திப்பின்போது கூட்டணி தொடரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இன்னும் முழுமையடையவில்லை. காங்கிரஸ் கட்சி தரப்பில் 35 முதல் 70 தொகுதிகள் வரை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் ராகுல் - கனிமொழி மீட்டிங்..!! காங்.-க்கு எத்தனை தொகுதிகள்..!! வெளியான முக்கிய தகவல்..!!
இதனிடையே தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பேசுவோம் என்று தெரிவித்தார். மேலும் கூட்டணி குறித்து திமுக எம்பி கனிமொழியுடன் இன்று காலை பேசியதாகவும் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிக திமிரை அடக்கணும்.. மதுரை வடக்கு தொகுதியில் போட்டி..! மாணிக்கம் தாகூர் எம்பி வலியுறுத்தல்..!