டெல்லியில் ராகுல் - கனிமொழி மீட்டிங்..!! காங்.-க்கு எத்தனை தொகுதிகள்..!! வெளியான முக்கிய தகவல்..!!
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக சார்பில் 36 தொகுதிகள் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 36 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பான இறுதிக்கட்ட முடிவு டெல்லியில் ராகுல் காந்தியின் இல்லத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு ராஜ்யசபா இடங்களை வழங்குவதற்கும் திமுக தரப்பில் முன்வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை கூடுதல் இடங்களைப் பெறுவதற்கு காங்கிரஸ் தரப்பு தீவிரமாக முயன்று வருகிறது. கூட்டணியில் தொடர்ந்து பங்கேற்றாலும், ஆட்சி அதிகாரத்தில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்தி வருவதால், இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து சலசலப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: “டெல்லியில் ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு!” - 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தீவிரம்!
காங்கிரஸ் தரப்பில் 40 தொகுதிகள் வரை கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், ஆட்சியில் பங்கு இல்லையெனில் கூட்டணியை மறுபரிசீலனை செய்யலாம் என்ற கருத்துகளும் எழுந்துள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இரு வேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. ஒரு தரப்பினர், திமுகவுடன் சமரசம் செய்து கூட்டணியைத் தக்க வைத்துக் கொள்வதே நல்லது என்று வாதிடுகின்றனர்.
மற்றொரு தரப்பினரோ, உரிய உரிமைகள் வழங்கப்படாவிட்டால் திமுக கூட்டணி தேவையில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்தகைய உள் முரண்பாடுகளால் காங்கிரஸ் கட்சி எடுக்கவுள்ள இறுதி முடிவு என்ன என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இரு கட்சிகளைச் சேர்ந்த சில நிர்வாகிகள் திடீரென பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வருவதால், கூட்டணியில் உரசல்கள் ஏற்பட்டுள்ளன.
இத்தகைய பதற்றமான சூழலில்தான், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி டெல்லி சென்று ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பில் தொகுதி பங்கீடு, கூட்டணி உறுதிப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு கட்சிகளும் கூட்டணியை வலுப்படுத்துவதற்கு முயலும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் முடிவு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இறுதியாக எந்த முடிவை எடுக்கும் என்பதும், திமுக எவ்வாறு இதற்கு பதிலளிக்கும் என்பதும் அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என்று அரசியல் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: “விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” - அதிமுகவின் புதிய பிரச்சாரம் தொடக்கம்!