அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" ஸ்டிக்கர்... நாம் தமிழர் கட்சியினர் அதிரடி கைது...!
திருத்தணியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (TNSTC) பேருந்துகளின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டில் எழுதப்பட்டிருக்கும் பெயரில் “தமிழ்நாடு” என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு சமீபத்தில் மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் இந்த மாற்றம் செய்யப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தொடங்கி வைத்த புதிய பேருந்துகளில் இருந்தே “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்” என்ற முழுப் பெயருக்குப் பதிலாக “அரசு போக்குவரத்துக் கழகம்” என்று சுருக்கமாக எழுதப்பட்டது. காரணமாகக் கூறப்பட்டது, பேருந்தின் முன்பகுதியில் முழுப் பெயரும் (உதாரணமாக “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம்” அல்லது “கும்பகோணம்”) எழுதினால் அது மிக நீளமாகி, பயணிகள் தொலைவில் இருந்து எளிதாகப் படிக்க முடியாது என்பதே. இதனால், பெயரைப் பெரிதாகவும் தெளிவாகவும் எழுத வசதியாக இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடைமுறை அதிமுக ஆட்சிக்குப் பிறகு திமுக ஆட்சியிலும் தொடர்ந்தது.
ஆனால், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதே விவகாரம் ஒருமுறை சர்ச்சையாக எழுந்தபோது, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அதிமுக ஆட்சியில் தான் இந்த மாற்றம் நடந்தது என்று தெளிவுபடுத்தினார். அது புதிய மாற்றமல்ல, 13 ஆண்டுகளாகத் தொடரும் நடைமுறை என்றும் கூறினார்.இருப்பினும், இந்தப் பிரச்னை மீண்டும் தலைதூக்கியது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதை வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
இதையும் படிங்க: பஸ்களில் தமிழ்நாடு அரசு -னு எழுத என்ன தயக்கம்? மை தீர்ந்து போச்சா? சீமான் சரமாரி கேள்வி..!
ஆரம்ப காலங்களில் 'தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம்' என்றே அரசுப்பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக அரசு தமிழ்நாடு பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றும் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் என்று முழுமையாக எழுதுவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம் என்றும் வண்ணப்பூச்சு தீர்ந்துவிட்டதா எனவும் கேள்வி எழுப்பினார். அரசுக்கு தெரியாமல் வண்ணப்பூச்சு ஒப்பந்ததாரர் ஊழல் செய்துவிட்டாரா அல்லது போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு என்று எழுதினால் கோடிக்கணக்கில் இழப்புதான் ஏற்பட்டுவிடுமா என கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுத்த பிறகும் திமுக அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் தமிழ்நாடு என்று பெயரைச் சேர்க்க மறுத்து அமைதிகாப்பது ஏன் என்று கேட்டுள்ளார். இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயருக்கு முன்னால் தமிழ்நாடு என்று ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். திருத்தணி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்துகளை தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர் நாம் தமிழர் கட்சியினர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி... வேன் மீது மோதிய அரசு பேருந்து... பயணிகளின் நிலை என்ன?