×
 

கலாச்சாரத்தை காக்க என்ன செய்தார்கள்? திமுகவை மறைமுகமாக சீண்டி பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி..!

தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் சலங்கை நாதம் கலை விழா, பாரம்பரிய நடனங்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டு ரசித்தார்.

தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் சலங்கை நாதம் கலை விழா கடந்த 10 ந் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மாலை பல்வேறு மாநில பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இதைத் தொடர்ந்து இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கேரள மாநில தய்யம் பாரம்பரிய கலை நிகழ்ச்சி மற்றும் மணிப்பூர் மாநில கரோபா ஆகிய கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தார். 

அப்போது கேரள மாநில தய்யம் கலை நிகழ்ச்சியில் சுவாமி வேடமணிந்த ஒருவர்  தமிழக கவர்னரை ஆசீர்வதித்து வாழ்த்தினார். இந்த கலை நிகழ்ச்சிகளை ஏராளமானோர் பார்வையிட்டு கண்டு ரசித்தனர். விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால கலாசார பெருமை கொண்டது பாரதம். இங்கு ஏராளமான மன்னர்கள் ஆட்சி செய்திருந்தாலும், மிக உயரிய கலாசாரத்தால் பாரதமாக இணைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: முக்கியமான மசோதா மிஸ்ஸிங்.. ஆளுநர் ஒப்புதல் கொடுத்த 4 மசோதா என்னனு தெரியுமா?

பாரதம் என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.மக்கள் நாடு முழுவதும் பயணம் செய்கின்றனர். காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அசாம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வருகின்றனர். இதேபோல, தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் காசிக்கு செல்கின்றனர். இந்த கலாசாரத்தால் உருவாக்கப்பட்ட இணைப்பே பாரதம் என அழைக்கப்படுகிறது. 

சுதந்திரப் போராட்டத்தின்போது நாடு முழுவதும் மக்கள் இணைந்து விடுதலைக்காகப் போராடினர். இந்த இணைப்பு கலாசாரத்தால்தான் உருவானது. சுதந்திரத்துக்கு பிறகு நாம் பாரதிய அரசியலை உருவாக்காமல், மேற்கத்திய அரசியலை பின்பற்றத் தொடங்கியது துரதிருஷ்டவசமானது. அதிகாரத்தை அடைவதற்காக இந்த மேற்கத்திய அரசியல் பின்பற்றப்படுகிறது. இதனால், ஜாதி, மதம், மொழி உள்ளிட்டவற்றால் பிரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தலைமையகமான சென்னை வளமாக இருக்கிறது. ஆனால், கலாசார தலைமையகமான தஞ்சாவூர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் கலாசாரத்தைப் பாதுகாப்பதாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூறுகிறது. ஆனால், தமிழ் கலாசாரத்தை பாதுகாக்க என்ன செய்தன. கலையைப் புறக்கணித்தது மட்டுமல்லாமல், கலாசாரமே அரசியலாக்கப்பட்டது.

கலாசாரம் நம்மை இணைத்திருந்தாலும், அதை அரசியல் பிரிக்கிறது. கலாசாரத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காது. சில கலை நிகழ்ச்சிகளை நடத்தி, கலைஞர்களை அழைத்து பயணப்படி உள்ளிட்டவற்றை மட்டுமே அரசு வழங்கும். சமுதாயத்தினர்தான் புரவலர்களாக இருந்து கலைக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மூலம் கலை, பண்பாடு செழித்தோங்கும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அன்னைக்கு இனிச்சது.. இன்னைக்கு வலிக்குதா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share