“முதலீடுகள் முடக்கம், தகுதியற்ற பேராசிரியர்கள்!” தமிழக அரசை தாக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு!
தமிழகத்தில் முதலீடுகள் குறைந்து வருவதாக விமர்சித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, தகுதியற்ற பேராசிரியர்களால் பொறியியல் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதலீடுகள் ஈர்ப்பது மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பல பேராசிரியர்கள் தகுதியற்றவர்களாக இருப்பதால், தரமான பொறியாளர்களை உருவாக்க முடிவதில்லை என அவர் கல்வியின் தரம் குறித்துக் கவலை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நிலவி வரும் சூழலில், இன்று நடைபெற்ற கல்விசார் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் கல்வித் தரம் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழகம் முதலீடுகளை ஈர்ப்பதில் பின்னோக்கிச் செல்வதாகவும், மாநிலத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) வளர்ச்சியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வித் துறை குறித்துப் பேசிய ஆளுநர், தமிழகத்தில் உள்ள பல பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் போதிய தகுதியுடையவர்களாக இல்லை. கற்பிக்கும் பேராசிரியர்களே தகுதியற்று இருப்பதால், அவர்களால் உலகத்தரம் வாய்ந்த பொறியாளர்களை உருவாக்க முடிவதில்லை. இது நமது மாநிலத்தின் எதிர்காலத் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என வேதனை தெரிவித்தார். பள்ளி கல்வி முதல் உயர்கல்வி மற்றும் பிஎச்டி (Ph.D) ஆராய்ச்சி வரை அனைத்து நிலைகளிலும் தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திருக்குறள் சனாதன தர்மத்தின் வேர்! திருவள்ளுவர் தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!
சமீபகாலமாகத் தமிழக அரசு முன்னெடுத்து வரும் முதலீட்டாளர் மாநாடுகள் குறித்து மறைமுகமாக விமர்சித்த ஆளுநர், புள்ளிவிவரங்கள் சொல்வது வேறு, கள நிலவரம் வேறு என்பதை உணர்த்தினார். குறு, சிறு தொழில்கள் நலிவடைந்து வருவதால் வேலைவாய்ப்பு உருவாக்கம் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆராய்ச்சி மாணவர்களின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், வெறும் பட்டங்களுக்காக மட்டும் ஆராய்ச்சி செய்யாமல் சமூக மாற்றத்திற்கான தேடலாக அது இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆளுநரின் இந்தத் ‘தகுதியற்ற பேராசிரியர்கள்’ என்ற கருத்து கல்வித் துறையினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், தொழில்துறை குறித்த அவரது விமர்சனத்திற்குத் தமிழக அமைச்சர்கள் தரப்பிலிருந்து விரைவில் பதிலடி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரின் இந்தப் பேச்சு, தமிழக அரசின் கல்வி மற்றும் தொழில் கொள்கைகள் மீதான விவாதத்தை மீண்டும் ஒருமுறை அரசியல் அரங்கில் சூடாக்கியுள்ளது.
இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க... ரொம்ப முக்கியம்..! வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்...!