மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர். அவரிடமிருந்து பெறப்பட்ட இதயம் மற்றும் நுரையீரல்கள் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூன்று நபர்களுக்கு, மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தனது உடல் உறுப்புகள் மூலம் மறுவாழ்வு அளித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை நகரில், மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தி மிக விரைவாக உடல் உறுப்புகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அந்தத் துயரமானச் சூழலிலும், அச்சிறுவனின் பெற்றோர் முன்வந்து அவனது உடல் உறுப்புகளைத் தானம் செய்யச் சம்மதித்தனர். சிறுவனிடம் இருந்து பெறப்பட்ட இதயம் மற்றும் இரண்டு நுரையீரல்கள் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சாலை வழிப் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், முதன்முறையாகச் சென்னை விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டை வரை தனி மெட்ரோ ரயில் இதற்காக இயக்கப்பட்டது.
மெட்ரோ ரயிலில் கொண்டு வரப்பட்ட உறுப்புகள், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் எவ்விதத் தடையுமின்றி 'பசுமை வழித்தடம்' வழியாக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இதையும் படிங்க: தேர்தல் களம் சூடுபிடிக்குது... பாண்டிய நாட்டில் கால்பதிக்கும் பிரதமர் மோடி!
மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர், அந்த உறுப்புகளை வெற்றிகரமாகப் பொருத்தினார்கள். 69 வயது முதியவர் மற்றும் 34 வயது இளைஞர் ஆகிய இருவருக்குத் தலா ஒரு நுரையீரல் வீதம் பொருத்தப்பட்டது. மறைந்த சிறுவனின் இந்த மகத்தானத் தியாகமும், அரசு இயந்திரங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்ட விதமும் இன்று பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!