“சி.எம். இதை செய்ய வேண்டிய அவசியமே இல்ல...” - அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு...!
இதை முதலமைச்சர் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை அவர் சார்பில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் செய்து வருகிறோம்
பெரியபாளையம் அருகே வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை செயற்கை நுண்ணறிவுத்துறை அமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மக்களின் மேல் உள்ள அக்கறையால் தான் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளித்து வருகிறோம். அனைத்தையும் முதலமைச்சர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் செய்வார்கள். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சர்ச்சை பேச்சு.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21ஆம் தேதி அமோனியா வாயு கசிந்து 83 தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்தனர். இவர்களில் அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்த நிலையில், வேல்ஸ், வெங்கடேஸ்வரா, ஸ்டான்லி, ராஜீவ்காந்தி என 4 மருத்துவமனைகளில் 43 வட மாநிலத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மஞ்சங்கரணையில் அமைந்துள்ள வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 தொழிலாளர்களை செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி கேட்ட போது, செய்தியாளர்களை சந்திக்க மறுத்து வேகமாக கார் ஏறி அமைச்சர் குமார் புறப்பட்டு சென்றார். அமைச்சருக்கு பதிலாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மருத்துவமனை என்பதால் பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையூறு ஏற்படக்கூடாது என அமைச்சர் புறப்பட்டு சென்றார் எனவும், மக்களின் மேல் உள்ள அக்கறையால் தான் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும், எந்தத் தவறும் செய்யாததால் யாரைக் கண்டும் நாங்கள் அஞ்ச வேண்டியது இல்லை என கூறினார்.
இதையும் படிங்க: சி. விஜயபாஸ்கரின் தவெக என்ட்ரி ஒத்திவைப்பு..! காரணம் இது தான்..!! அரசியலில் பரபரப்பு..!
மருத்துவத்தில் உள்ள தொழிலாளர்களின் குடும்பங்களை வரவழைத்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தும் குணமடைந்தவர்களை அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதற்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறோம் என்றும், இதை முதலமைச்சர் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை அவர் சார்பில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் செய்து வருகிறோம் எனவும் தொழிலாளர்களின் உயிரை காப்பாற்றுவது தான் முதல் வேலை அந்த பணியை நாங்கள் செய்து வருகிறோம் என கூறினார்.
இதையும் படிங்க: "கஞ்சாவுக்கு ஓட்டம்... டாஸ்மாக்குக்கு மௌனமா? CM விஜயை கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!!