×
 

இந்த சமூகத்தில் தான் குறை..! திருநங்கை மறுவாழ்வு திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

திருநங்கைகள் சமூகத்தில் இன்னும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர் என உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். திருநங்கைகளும் கடவுளின் பிள்ளைகளே என்றும் சமூகமே அவர்களை வறுமைக்கு தள்ளுகிறது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார். விருதுநகரை சேர்ந்த யூடியூபர் சரத்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், காவல் நிலையத்தில் திருநங்கை ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்தேன். அதில் திருநங்கைகள் பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்ததாக வந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அவர்கள் தொடர்பான விவரங்களை சேகரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தேன். 

இது தொடர்பாக காவல்துறையினர் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "மனுதாரர் ஏற்கனவே கூறப்பட்ட தகவலை பரப்பினாரை தவிர அவராக புதிதாக எந்த விபரத்தையும் தெரிவிக்கவில்லை. அதோடு அவர் பகிர்ந்த விவரம் தவறானது என அறிந்தவுடன் வீடியோவை நீக்கிவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில், "காவல்துறை மற்றும் அரசுக்கு எதிராக தவறான தகவலை பரப்பி உள்ளார். திருநங்கை சமூகத்தின் பிரச்சனைகளை அரசு கவனிக்கவில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கியுள்ளார். திருநங்கைகள் பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்தது தொடர்பாக சில புகார்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, "மனுதாரர் வந்த செய்தியை தான் பகிர்ந்துள்ளார்., இந்த செய்தி பிற ஊடகங்களிலும் முன்பே வெளியாகி உள்ளது. எனவே மனுதாரருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பட்டியலின மாணவர்கள் மர்ம மரணம்... தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

அதேசமயம் திருநங்கை தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் நீதிமன்றத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. திருநங்கைகள் இன்னும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். திருநங்கைகளும் கடவுளின் பிள்ளைகளே. திருநங்கைகள் சமூகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சமூகமே அவர்களை புறக்கணித்து வறுமை நிலைக்குத் தள்ளுகிறது. இது சமூகத்தின் தோல்வி. திருநங்கைகளையும் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்து தெரிவித்தார். திருநங்கைகளின் பிறப்பில் குறையில்லை. அவர்கள் மீதான சமூகத்தின் அணுகுமுறையிலேயே குறை உள்ளது. குடும்பம் மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாகவே அவர்களை பார்க்க வேண்டும். திருநங்கைகளும் மனிதர்களே, அவர்களின் மரியாதை, மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறி உள்ளார்.

தமிழக அரசு திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் உருவாக்கி, சுயதொழில் வாய்ப்புகள், நிலையான வாழ்வாதாரம், மாண்புமிக்க வாழ்க்கை, சமூகத்தில் இணக்கமான நிலையை உருவாக்குதல், திருநங்கைகளின் தேவைக்கு ஏற்ப நலத்திட்டங்களை உருவாக்குதல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக தலைமைச் செயலர் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து இது தொடர்பான நடவடிக்கையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்., உத்தரவு நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜூலை 26 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க: LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் இதுதான் நடக்கும்..!! தமிழ்நாடு அரசு வார்னிங்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share