"3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!
ஜூலை மாதத்தில் 3.70 லட்சம் மின் இணைப்புகளுக்கு அதிக மின்கட்டணம் வந்த விவகாரத்தில், ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை அளிக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 3.70 லட்சம் மின் சேவை இணைப்புகளுக்குக் வழக்கத்தை விட அதிக அளவில் மின்கட்டணம் கணக்கிடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, இது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கான மின் நுகர்வு கணக்கெடுக்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மே மாதக் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை மாதத்தில் பல இடங்களில் மின்கட்டணம் வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் தரப்பிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பிலும் பரவலாகப் புகார்கள் எழுந்தன.
இப்புகார்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் அருண்ராய் ஐ.ஏ.எஸ்., அனைத்து மண்டலத் தலைமை மின் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்டப் பொறியாளர்களுக்கு அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: CMDA திவாலானது ஏன்.? வெள்ளை அறிக்கை கொடுங்க..! அன்புமணி வலியுறுத்தல்..!!
அந்தச் சுற்றறிக்கையில், "கடந்த மே மாதக் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் கணிசமான அளவுக்குக் கட்டண வேறுபாடு கொண்டுள்ள 3.70 லட்சம் மின் இணைப்புகளை மூத்த அதிகாரிகளைக் கொண்டு உடனடியாக மறு ஆய்வு (Re-audit) செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த அதிகாரிகள் எத்தனை மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் போது மின் அளவீடு எடுத்ததில் ஏதேனும் தவறுகளோ அல்லது கணக்கீட்டுப் பிழைகளோ கண்டறியப்பட்டால், உடனடியாகக் கட்டணத்தில் திருத்தங்களைச் செய்து நுகர்வோருக்கு உரிய விலக்கு அல்லது பலன்களை வழங்க வேண்டும்.
இந்த மறு ஆய்வுப் பணிகளை வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் முழுமையாக முடித்து விரிவான அறிக்கையைத் தலைமை அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்" எனக் கடுமையான உத்தர பிறப்பித்துள்ளார். மின்வாரியத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோரிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!