காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!
கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 13,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையைத் தொடர்ந்து, கபினி அணையிலிருந்து தமிழகத்திற்குத் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 13,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹெச்.டி. கோட்டை பகுதியில் உள்ள கபினி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கேரளாவின் வயநாடு மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனால் அணையிலிருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 11,896 கன அடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 13,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழக எல்லையான பிலிகுண்டுலு மற்றும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
மேலும், இந்த நீர் மேட்டூர் அணையை வந்தடையும் போது அணையின் நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு கிடுகிடுவென உயரும் என்பதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!