#BREAKING: சோகத்தில் மூழ்கிய கரூர்.. கேட்கும் மரண ஓலம்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 40 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆறு குழந்தைகள் உட்பட பலர் பலியாகியுள்ளனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில், நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் தனது உரையை நடத்திக் கொண்டிருந்தபோது, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கூட்டத்தைச் சுற்றிய சாலைகளில் திரண்டனர். கூட்டத்தின் அளவு கட்டுப்பாட்டை மீறியதால் பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். இதனால் பலர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: #BREAKING: கரூரில் பெரும் துயரம்.. தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. கதறும் உறவினர்கள்..!!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இச்சம்பவத்தை அறிந்தவுடன் கரூருக்கு அவசர ரீதியாக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சரை அனுப்பினார். "கரூரில் நடைபெற்ற சம்பவம் கவலையை ஏற்படுத்துகிறது. மயங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மேலும் நாளை கரூருக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே எடப்பாடி பழனிசாமியும் கரூருக்கு விரைந்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவத்தை அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார் . இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில், கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள். என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்க்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் துபாய் சென்றுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த சம்பவத்தை அறிந்ததும் சென்னை திரும்பியுள்ளார்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டின் அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜயின் புதிய கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னியோட்டு பெரிய அளவில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டிருந்தது. இந்த முதல் பொது நிகழ்ச்சியே சோகத்தில் முடிந்தது கட்சியின் முன்னேற்றத்தை பாதிக்கலாம் எனக் கருதப்படுகிறது.
எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக, கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றும் இது அரசின் செயல்பாட்டின்மையின் விளைவு என்றும் விமர்சித்துள்ளன. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் இச்சம்பவத்தை 'கரூரின் கருப்பு நாள்' என்று அழைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். தேசிய அளவில் இது நிகழ்ச்சி நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.
இந்தத் துயர சம்பவம் தமிழக மக்களைத் தாண்டி, இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வட்டங்களைத் தொட்டுள்ளது. பிரதமரின் இரங்கல், மாநில அரசின் உதவிகள் இருந்தபோதிலும், இனி நிகழ்ச்சிகளில் கூட்ட முகவர் முறைகளை வலுப்படுத்த வேண்டும் என மக்கள் குரல் கொட்டுகிறது.
இதையும் படிங்க: #BREAKING இதுதான் உங்க டக்கா? தவெக கோட்டையாக மாறிய கரூரில் ஆளும் கட்சியை கிண்டலடித்த விஜய்..!!