தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது... ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!
நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரான கவின்குமார், சென்னையில் ஒரு பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தவர்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், தனது தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு காரணமாக திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் அமைந்த சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.
மருத்துவமனை வாசலில் காத்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞர் கவினை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பிச் சென்ற சம்பவம் குறித்த விசாரணையில், கொலையை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞர் செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. 4 ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!
போலீசில் அவர் சரணடைந்த நிலையில், கவினை வெட்டிக் கொலை செய்ததாக தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, பாளையங்கோட்டை காவல்துறையினர் சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
தொடர்ந்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும், பெண்ணின் பெற்றோர்களான எஸ்ஐ தம்பதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து, கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி என்ற பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தானும் கவினும் காதலித்து வந்ததாக கூறியிருந்தார்.
இதற்கிடையில், ஐந்து நாட்களாக நீதி கேட்டு கவின் உடலை வாங்க மறுத்த போராடி வந்த உறவினர்கள், இறுதியில் கவின் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர். கவின் உடலுக்கு அமைச்சர் நேரு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தி இருந்தார்.
இந்த நிலையில் கவின் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கவியின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாரும் தப்பிக்க முடியாது எனவும் முதலமைச்சர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மக்கள் எதிர்த்தும் எப்படி முடிவெடுக்க முடியுது? தனியார் பேருந்துகள் கட்டண உயர்வுக்கு அன்புமணி எதிர்ப்பு..!