×
 

கிட்னி வியாபார பொருளா? செல்வபெருந்தகை ஆவேசம்..!

கிட்னி வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.

நாமக்கல் மாவட்டம், தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக, கோழிப்பண்ணை மற்றும் முட்டை ஏற்றுமதி தொழிலில் புகழ்பெற்றிருந்தாலும், சமீபத்தில் சட்டவிரோத கிட்னி விற்பனை தொடர்பான செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம், மற்றும் திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் விசைத்தறி மற்றும் கோழிப்பண்ணைத் தொழில்களில் பணியாற்றும் ஏழைத் தொழிலாளர்கள் பெரும்பாலான மக்களாக உள்ளனர்.

இவர்களின் பொருளாதார வறுமையைப் பயன்படுத்தி, சில கும்பல்கள் சட்டவிரோதமாக கிட்னி விற்பனை செய்யும் நெட்வொர்க்கை இயக்குவதாக கூறப்படுகிறது. வறுமையில் வாடும் தொழிலாளர்களை குறிவைத்து, அவர்களுக்கு மிகக் குறைந்த தொகையை வாக்குறுதியாக அளித்து, அவர்களின் கிட்னியை பறிக்கும் செயல் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்த கிட்னிகள் சந்தையில் 10 முதல் 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆதார் அட்டையில் முகவரி மாற்றப்பட்டு, மோசடி செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் புரோக்கர்கள் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தர்மபுரியில் 2013இல் இதேபோன்ற கிட்னி விற்பனை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது, தரகர்களுடன் மருத்துவமனைகளும் தொடர்புடையதாக விசாரணையில் தெரியவந்தது. ஆனால், சட்டரீதியான ஆதாரங்கள் இல்லாததால், பலர் தண்டனையிலிருந்து தப்பித்தனர்.இந்த நிலையில், நாமக்கலில் கிட்னி விற்பனை நடப்பது தொடர்பாக ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாய்த்து கவுன்சிலர் பாலசுப்ரமணியம், முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு ஆதாரத்துடன் புகார் அனுப்பினார். தகவலறிந்த பள்ளிப் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: எனக்கு என்ன தலை எழுத்தா? அவர் சொன்னாரு நான் செஞ்சேன்.. ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்த அன்புமணி..!

இந்த நிலையில், இக் கொடூரச்செயலில் ஈடுபடுபவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக செல்வப்பெருத்தகை கூறினார். ஏழை மக்களின் உடல் உறுப்புகளை விற்பனைக்கான பொருளாக பயன்படுத்துவது மனித உரிமையை முற்றிலும் இழிவுப்படுத்தும் செயல் என்று தெரிவித்த அவர், இன்றைய சமூகத்தில் சில மனித உறுப்புகள், குறிப்பாக 'கிட்னி', ஒரு வியாபாரப் பொருளாக மாறிவிட்டது என்பது வருத்தத்துக்குரியது என்று கூறினார். சட்டப்படி தானம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்க, சிலர் அதனைத் தாண்டி, லாப நோக்கத்தோடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றம் என்றும் தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: கட்சியை கடந்த அன்பு! ஓடோடிச் சென்று ஜி.கே.மணியிடம் நலம் விசாரித்த செல்வப்பெருந்தகை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share