தனுஷிற்கு நோட்டீஸ்: ரூ.21 கோடி இழப்பீடு கேட்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்!
நடிகர் தனுஷ் கால்ஷீட் தராமல் இழுத்தடித்ததால் ₹20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள ஒரு திரைப்படத் திட்டம் தொடர்பாக, நடிகர் தனுஷிற்குத் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக வழக்கறிஞர் ஏ. சிதம்பரம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த டிசம்பர் 2025-ல் அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸ் தற்போது ஊடகங்களில் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு 'நான் ருத்ரன்' என்ற படத்திற்காகத் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தைத் தனுஷ் இயக்கி, நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், இதற்காக தனுஷ் உட்படப் படத்தில் நடித்த நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா போன்ற நட்சத்திரங்களுக்குப் பல கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டது.
சுமார் 38 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தனுஷின் 'வண்டர்பார்' நிறுவனம் மூலம் 8 கோடி ரூபாய் உட்பட மொத்தம் 20 கோடி ரூபாய் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தனுஷ் முழுமையான திரைக்கதையை வழங்காததாலும், தனது கால்ஷீட்டுகளை பிற படங்களுக்கு கொடுத்ததாலும் இந்தப் படம் பாதியிலேயே முடங்கியதாக தயாரிப்பாளர் தரப்பு குற்றம் சாட்டுகிறது. இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், 2025-ஆம் ஆண்டு இறுதியில் புதிய படம் ஒன்றிற்கு கால்ஷீட் தருவதாகத் தனுஷ் கடிதம் மூலம் உறுதியளித்திருந்தாராம்.
இதையும் படிங்க: "தமிழக அரசின் விருது தாயின் முத்தத்திற்குச் சமம்!! கலைஞர்களை வாழ்த்திய துணை முதல்வர்!
செலவுகள் செய்யப்பட்ட நிலையில், தனுஷ் முழுமையானத் திரைக்கதையை வழங்கவில்லை என்றும், இந்தப் படத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் பிற படங்களுக்குக் கால்ஷீட் கொடுத்துவிட்டதாகவும் தேனாண்டாள் பிலிம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் தங்களது படம் பாதியிலேயே முடங்கி, முதலீடு செய்த பணம் வீணானதாகத் தயாரிப்புத் தரப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டு இறுதியில் கால்ஷீட் தருவதாகத் தனுஷ் அளித்த வாக்குறுதியைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த நோட்டீஸில், உடனடியாகத் தனது முடிவைத் தனுஷ் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், செலவிடப்பட்ட ₹20 கோடி மற்றும் இழப்பீடாக ₹1 கோடி என மொத்தம் ₹21 கோடி வழங்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றம் மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே தனுஷிற்கு எதிராகப் புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை தனுஷ் தரப்பிற்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தவெக கூட்டத்துக்கு சவப்பெட்டியோட போங்க ..! அதிமுக செய்தி தொடர்பாளர் காட்டம்..!