மதுரையை உலுக்கிய சம்பவம்! விசாரணைக்குச் சென்ற இளைஞர் பலி... காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்...!
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் பலியான விவகாரத்தில், மதுரை அண்ணா நகர் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் அண்ணா நகர் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் - முத்துலெட்சுமி தம்பதியரின் மகன் தினேஷ்குமார். இவர் ஐடிஐ முடித்துவிட்டு வெள்ளரிபட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாக அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா தலைமையில் தனிப்படை காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
பிறகு அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு தினேஷ்குமாரின் தந்தை சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லாததால் தனது வழக்கறிஞருடன் காவல்துறையினர்களிடம் மகன் எங்கே என கேட்டுள்ளார். இதற்கிடையில் மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள கால்வாயில் சடலம் மூழ்கிய நிலையில் கடப்பதாக தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தினேஷ் குமார் உடல் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை வண்டியூர் அம்மா திடல் அருகே உள்ள புற காவல் நிலையத்தில் வைத்து தினேஷ் குமாரிடம் விசாரணை நடத்தியதாகவும், காவல்துறை வாகனத்தில் விசாரணை முடிந்து ஏற்றிய போது தப்பிக்க முயன்று வைகையாற்றிற்கு தண்ணீர் செல்லும் வண்டியூர் கால்வாயில் அவர் குதித்து இறந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்... CBI விசாரணை கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...!
தினேஷ்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் தினேஷ்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மதுரை அண்ணா நகர் காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணைக்காக அடைத்து செல்லப்பட்டபோது உயிரிழந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தினேஷ்குமார் என்பவர் தற்போது உயிரிழந்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடக்கம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!