×
 

மதுரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் துர்நாற்றம்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

ஆவின் பால் துர்நாற்ற விவகாரத்தில் பாலி ஃபிலிம் விநியோகித்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆவின் தெரிவித்து உள்ளது.

மதுரை ஆவின் பாக்கெட்டுகளில் துர்நாற்றம் வீசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர ஆய்வில், பாலில் எந்தக் கோளாறும் இல்லை என்பதும், பாக்கெட் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஃபிலிமில் தான் பிரச்சனை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த ஃபிலிமை விநியோகித்த நிறுவனம் மீது சட்டப்பூர்வமாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆவின் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மதுரை ஆவின் ஒன்றியத்திலிருந்து கடந்த ஜூலை 27-ஆம் தேதி விற்பனைக்காக விநியோகிக்கப்பட்ட 'டிலைட்' (Delite) 500 மி.லி. பால் பாக்கெட்டுகளில் லேசான துர்நாற்றம் வீசுவதாக ஜூலை 28-ஆம் தேதியன்று நுகர்வோரிடமிருந்து ஆவின் நிர்வாகத்திற்கு அதிகாரப்பூர்வப் புகார் வந்தது. நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இப்புகார் குறித்து மதுரை ஆவின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக விரிவான விசாரணையையும் வேதியியல் ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின் முடிவில், பாலின் தரத்திலோ அல்லது சுத்திகரிப்பு முறையிலோ எந்தவிதத் துர்நாற்றமும் இல்லை என்பது தெளிவாக உறுதி செய்யப்பட்டது. பால் பாக்கெட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பாலித்தீன் ஃபிலிமை (Poly Film) அச்சிட்டு உலரவைக்கும் கியூரிங் (Curing) செயல்முறையில் ஏற்பட்ட முறையற்ற தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே, அந்த ஃபிலிமிலிருந்து துர்நாற்றம் உருவாகியுள்ளது என்பது ஆய்வில் அம்பலமானது.

இதையும் படிங்க: திமுகவின் EVM குற்றச்சாட்டு..! ஆதாரம் இல்லை... தேர்தல் அதிகாரி விளக்கம்..!!

இதனைத் தொடர்ந்து, துர்நாற்றம் கண்டறியப்பட்ட பாலித்தீன் ஃபிலிம் ரோல்கள் அனைத்தும் பால் நிரப்பும் பிரிவிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தரமற்ற மற்றும் குறையுள்ள ஃபிலிம்களை விநியோகித்த தனியார் நிறுவனத்திற்கு உடனடியாக விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒப்பந்த விதிமுறைகளின்படி அந்நிறுவனத்தின் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளும் அபராதமும் விதிக்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளதோடு, பொதுமக்களுக்கு எப்போதுமே பாதுகாப்பான மற்றும் உயர்தரமான ஆவின் தயாரிப்புகளை வழங்குவதில் ஆவின் நிறுவனம் உறுதியாக உள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 5 வருஷத்தில் 5 கட்சி மாறிய அமாவாசை நிர்மல் குமார்: நெல்லையில் ஆர்.பி. உதயகுமார் ஆவேச பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share