“வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!
மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தனது இருப்பிடமான அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளர் வேடம் அணிந்து கண்டாங்கி பட்டுடுத்தி கையில் வளரியுடன் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மதுரை வந்தடைந்தார்.
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக கண்டாங்கி பட்டுடுத்தி கையில் வளரியுடன் தங்க பல்லக்கில் கள்ளர் வேடமணிந்து கோவிலிலிருந்து புறப்பட்டார் சுந்தரராஜப்பெருமாள்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நாளை மறுநாள் காலை 05.35 மணி முதல் 05.55 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 17ந் தேதி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழாவானது தொடங்கி நடைபெற்று வருகிறது.வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக இன்று தனது இருப்பிடமான அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளர் வேடம் அணிந்து கண்டாங்கி பட்டுடுத்தி கையில் வளரியுடன் அதிர்வேட்டுகள் முழங்க தங்கப்பல்லத்தில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
பொய்க்கரைப்பட்டி அப்பன் திருப்பதி கள்ளந்திரி கடச்சனேந்தல் வழியாக இன்று காலை மதுரை மூன்றுமாவடி வந்தடைந்த அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் இருந்து புறப்பட்டு வழிநெடுகிலும் உள்ள 495 மண்டப படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் நாளை காலை சரியாக 5.35 மணி முதல் 05.55மணிக்குள் வைகை ஆற்றில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான மண்டபத்தில் எழுந்தருள்வார்.
இதையும் படிங்க: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கி.மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!
அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு “கோவிந்தா... கோவிந்தா” கோஷம் முழங்க கள்ளழகரை வழிபடுவர். அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபடியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும். அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தரும் கள்ளழகர், இரண்டாம் தேதி மதியம் கோவிலில் இருந்து புறப்பாடகி வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபடியில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதனை தொடர்ந்து அன்று இரவு ராமராயர் மண்டபடியில் தசாவதாரம் நிகழ்ச்சியும், 3ஆம் தேதி தல்லாகுளம் மன்னர் ராஜா சேதுபதி மண்டபடியில் பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெறுவதை தொடர்ந்து நாலாம் தேதி அதிகாலை மதுரையில் இருந்து மீண்டும் தன் இருப்பிடமான அழகர் கோவிலுக்கு புறப்படுவார். 4ஆம் தேதி இரவு அப்பன் திருப்பதி கிராமத்தில் தங்கும் கள்ளழகர், ஐந்தாம் தேதி காலை புறப்பாடாகி 10 மணிக்கு தனது இருப்பிடமான அழகர் கோவிலை வந்தடைவார். அதனை தொடர்ந்து ஆறாம் தேதி உற்சவர் சாந்தி நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை ஒட்டி மாவட்ட காவல் துறை சார்பில் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!