காட்டுத்தீ விவகாரம்..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு..!!
வனப்பகுதிகளில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புலிகள் காப்பகங்கள், சரணாலயங்கள் மற்றும் வனப்பகுதிகளில் காட்டு தீயை தடுக்க மேம்பட்ட தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தவும், வன தீத்தடுப்பு மேலாண்மைக்கான வழிகாட்டலின் பரிந்துரைகளை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் செயல்படுத்தவும் உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. இதில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த மணிபாரதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மனுத்தாக்கல் செய்துள்ளார்.
"2021 முதல் 2025 வரை தமிழகத்தில் ஏற்பட்ட காட்டு தீ விபத்துகளுக்கான காரணங்கள் குறித்த விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும், அதன் அடிப்படையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், கொடைக்கானல், குமரி, மேகமலை விலங்குகள் சரணாலயங்கள் மறுசீரமைப்பு திட்டத்தை தயாரிக்கவும், மத்திய அரசின் வன மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
வருங்காலங்களில் தமிழக வனங்களில் காட்டு தீத்தடுப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், சரணாலயங்கள் மற்றும் வனப்பகுதிகளில் காட்டு தீ தடுப்பு மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தி, தீத்தடுப்பு மேலாண்மைக்கான வழிகாட்டலின் பரிந்துரைகளை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் செயல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் காலமானார்..!! சோகத்தில் மூழ்கிய இலக்கிய உலகம்..!!
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "வன தீத்தடுப்பு மேலாண்மை வழிகாட்டலில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தமிழகத்தில் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவற்றை பின்பற்றினாலே காட்டுத்தீயை பெருமளவில் தடுக்கலாம்" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், "வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஜூன் மாதத்துக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!