"நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!
நீட் தேர்வு மறுதேர்வு மற்றும் ஹால்டிக்கெட் பதிவிறக்கத்தில் நடக்கும் குளறுபடிகளுக்கு எம்.பி சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே 20 லட்சம் மாணவர்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர்" என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்யும் மென்பொருளில் திட்டமிட்டு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தேசியத் தேர்வு முகமை (NTA) மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மதுரை செல்லூர் பகுதியில் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய கட்டடங்களைத் திறந்து வைத்த பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது நீட் தேர்வு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு விபரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
நீட் தேர்வு விவகாரம் குறித்துப் பேசிய சு.வெங்கடேசன், "மறுதேர்வு நடத்துவதே மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதியாகும்; ஒரு மாணவனாக இருந்தால் மட்டும்தான் அதன் அசல் வலி என்னவென்று புரியும். உச்சநீதிமன்ற அமர்வுகூடத் தேசியத் தேர்வு முகமை மீது ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதற்கான இழப்பீடாகத் தேர்வுப் பணத்தைத் திருப்பி அளிப்போம் என உச்சநீதிமன்றத்தில் தேர்வு முகமை தெரிவித்தது.
இதையும் படிங்க: நீட் தேர்வு.. களமிறங்கும் விமானப்படை! ஜூன் 21-ல் நடக்கிறது மறுதேர்வு!
இம்மாதம் ஜூன் 21 அன்று மீண்டும் நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்வதற்கான வசதி நேற்று இரவு 7 மணிக்குத் தொடங்கியது. ஆனால், இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யும்போது, முந்தைய வங்கிக் கணக்கு விபரங்களைக் கேட்டுவிட்டுத் தன்னிச்சையாக 'எக்சிட்' (Exit) ஆகிறது. ஹால்டிக்கெட் கொடுப்பதற்கு எதற்காகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கு விபரங்களைக் கேட்கிறீர்கள்? கட்டணத்தைத் திருப்பித் தர மறுப்பதற்காகப் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள்; இது மிகவும் வெட்கக்கேடான விஷயம். தேர்வு முகமை மிக மலிவான வேலையைச் செய்துள்ளது; இது திட்டமிட்டுப் பணம் பறிக்கிற வேலை என்பதால் ஒன்றிய கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தினார்.
அடுத்ததாக மத்திய அரசின் கல்விக்கொள்கை குறித்துப் பேசிய அவர், "கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமசுகிருத மொழியைக் கட்டாயமாக்குவது என்பது, ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையின் வெளிப்படையான தாக்குதலாகும்; இதனைத் தங்களது பள்ளிகள் மூலம் இந்தியா முழுவதும் பரப்ப முயல்கிறார்கள்" என்று சாடினார். மேலும், தொகுதி மறுவரையறை (Delimitation) குறித்துப் பேசுகையில், "நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கும், மகளிர் இட ஒதுக்கீட்டுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. ஏற்கனவே இதனை நாங்கள் முறியடித்துக் காட்டியுள்ளோம்; எனவே, அதனை மீண்டும் கொண்டு வரும் துணிச்சல் ஒன்றிய அரசுக்கு இருக்காது" என்று குறிப்பிட்டார்.
இறுதியாக, தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "மனித மனங்களில் உள்ள அழுக்குகளை ஒரே நாளில் அடியோடு களைந்துவிட முடியாது. ஆனால், குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எவ்விதச் சமரசமும் இன்றி மிகக் கடுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகத் தற்போதைய அரசு மிகவும் தீவிரமாகச் செயல்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ள இந்தச் சூழலில், தேர்வு முகமையின் மென்பொருள் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி சு.வெங்கடேசன் எம்பி பேசியுள்ள விபரங்கள் கல்வி வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: நீட் மோசடி வழக்கு: ஜூலை 2க்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!