×
 

பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால்... தவெக அரசுக்கு கெடு விதித்த பால் உற்பத்தியாளர்கள்...!

பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் ,  வரும் 24ஆம் தேதி முதல் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என  பால் உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை

பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தர கோரி ,  காலி பால்  கேன்களுடன் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம். கொள்முதல் விலை உயர்த்தி தராவிட்டால் கூட்டுறவு சங்கங்கள் அழிந்து விடும் அபாயம் இருப்பதாக  பால் உற்பத்தியாளர்கள் வேதனை

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலமாக கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை குறித்து தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று  சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் சங்கம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் , கடலூர் , ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும்  500-க்கும் மேற்பட்ட  பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள்   காலி பால்  கேன்களுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஆவின் பால்களில் ரசாயன நெடி..! பாலித்தீன் ஃபிலிம் ரோல்களை திருப்பி அனுப்பிய மதுரை மண்டலம்..!

 ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பசும்பாலுக்கான விலையை 45 ரூபாயாகவும் ,  எருமைப் பாலுக்கான விலையை 60 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள்  எழுப்பிய  பால் உற்பத்தியாளர்கள் ,  இந்த அரசு  உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

 இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கூறும் பொழுது ,  கால்நடை தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் ,  தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளது, ஆனால் ஆவின் நிறுவனம் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தாமல் உற்பத்தியாளர்களை வஞ்சித்து வருகிறது.  இதனால் ஆவினில் கடந்த ஆண்டு 35 லட்சம் லிட்டராக  இருந்த பால் கொள்முதல் ,  தற்போது 28 லட்சம் லிட்டராக  குறைந்துள்ளதாகவும் ,  இதேநிலை நீடித்தால் ஆவின் நிறுவனம்   மூடும் நிலைக்கு செல்லும் என்று எச்சரிக்கை விடுத்த அவர்கள் பால் கூட்டுறவு சங்கங்களும் அழிந்துவிடும் என்றும் வேதனையோடு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த அரசுக்கு வருகின்ற 23ஆம் தேதி வரை கெடு விதிப்பதாகவும், இல்லையென்றால் வருகின்ற 24ஆம் தேதி முதல்  பால் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வாடிக்கையாளர்களுக்கு ஷாக்... தமிழகத்தில் பால், தயிர் விலை மீண்டும் உயர்வு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share