"மாற்றுத்திறனாளி என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்": சர்ச்சையான அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!
ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவச் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில், மாற்றுத்திறனாளி என்ற சொல்லிற்குப் பதிலாக உடல் ஊனமுற்றோர் என அமைச்சர் அருண்ராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற மருத்துவச் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில், "மாற்றுத்திறனாளி" என்ற அதிகாரப்பூர்வ சொல்லிற்குப் பதிலாக "உடல் ஊனமுற்றோர்" என்ற வார்த்தையை அமைச்சர் அருண்ராஜ் பயன்படுத்தியது சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2026-2027ஆம் கல்விய ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குச் சேர்க்கை ஆணைகளை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் வழங்கி வருகிறார். இந்நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
விழாவில் உரையாற்றிய அமைச்சர் அருண்ராஜ், சிறப்புப் பிரிவினரைக் குறிப்பிடும் போது "மாற்றுத்திறனாளிகள்" என்ற பயன்பாட்டிற்குப் பதிலாக "உடல் ஊனமுற்றோர்" என்ற சொல்லைப் பயன்படுத்தினார். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் "ஊனமுற்றோர்" என்ற சொல்லிற்குப் பதிலாகக் கண்ணியமிக்க "மாற்றுத்திறனாளி" என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த 2010 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வ அரசாணையாகவும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசு விழாவில் அமைச்சரே மீண்டும் பழைய சொல்லைப் பயன்படுத்தியது சமூக ஆர்வலர்கள் மற்றும் பயனாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த திட்டம்: அமைச்சர் அருண்ராஜை நேரில் சந்தித்த ஆஸ்திரேலிய தூதர்!
இதையும் படிங்க: "அட்ரஸ் இல்லை... தயாரிப்பு தேதி இல்லை!" எம்பிபிஎஸ் ரேங்க் லிஸ்ட் வெளியீட்டில் பரபரப்பு!