×
 

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி விபத்து! காட்டாங்குளத்தூரில் 26 வயது இளைஞர் பரிதாப பலி!

சென்னை காட்டாங்குளத்தூரில் தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரிக்குச் சொந்தமான கார் மோதியதில் இறையன்பு என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் தமிழக வெற்றிக் கழக அமைச்சரான ஜெகதீஸ்வரி என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சொகுசு கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த 26 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக அமைச்சரான ஜெகதீஸ்வரி, தனது சொந்த ஊரிலிருந்து அரசு முறைப் பயணமாக இன்று அதிகாலை சென்னை நோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசுக்குச் சொந்தமான பிரத்யேக வாகனத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றொரு தனியார் சொகுசு காரில் அவருக்குப் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியை நோக்கி அமைச்சரின் கான்வாய் வாகனங்கள் வந்துகொண்டிருந்த போது, குடும்பத்தினர் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியே 'ஹோண்டா டியோ' (Honda Dio) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இறையன்பு (வயது 26) என்ற இளைஞரின் வாகனம் மீது பயங்கர வேகத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: சமையல்காரரை தாக்கியதால் மட்டுமே சஸ்பெண்ட்! மாணவர் மரணம் குறித்து கல்லூரி முதல்வர் பேட்டி!

காரின் அசுர வேக மோதலில் இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்ட இளைஞர் இறையன்பு, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்தவுடன் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அதிர்ச்சியடைந்து அங்கு திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், உயிரிழந்த இளைஞர் இறையன்புவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காகச் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயரிலேயே அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விபத்துக்குக் காரணமான அமைச்சரின் காரைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்தும் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் குறித்தும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

இதையும் படிங்க: 3 நாட்கள் விடுமுறைக்குப்பின் கூடும் சட்டப்பேரவை: முதல்வர் ஜோசப் விஜயின் பதிலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share