சமையல்காரரை தாக்கியதால் மட்டுமே சஸ்பெண்ட்! மாணவர் மரணம் குறித்து கல்லூரி முதல்வர் பேட்டி!
கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் உயிரிழப்பு குறித்து கல்லூரி நிர்வாகம் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளது.
கோவையில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியான ஹிந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் அமுதனின் உயிரிழப்பு தொடர்பாகக் கல்லூரி நிர்வாகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்பு விளக்கமளித்துள்ளது.
கல்லூரியில் மெகாட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து வந்த மாணவர் அமுதன், விடுதி சமையல்காரருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயா மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களான அமுதன் மற்றும் அஜீஷ் ஆகியோர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே வந்துள்ளனர். அப்போது விடுதி சமையல்காரரான மனோஜ், 'ஏன் இந்த நேரத்தில் வெளியே வருகிறீர்கள்?' எனக் கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சமையல்காரர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஆக.17 முதல் கோவையில் புதிய டிராஃபிக் ரூல்ஸ்.. கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு..!!
இச்சம்பவத்தைக் கண்டித்து விடுதி சமையல்காரர்கள் பணிப்புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்தனர். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் மாணவர்கள் தவறை ஒப்புக்கொண்டதால், ஜூலை 24 அன்று அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கல்லூரி வளாகத்திற்குள் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. விடுதி ஊழியரைத் தாக்கியதற்காக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்றும் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதால் ஆகஸ்ட் 11-ஆம் தேதி மீண்டும் வந்து சந்திக்குமாறு பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆகஸ்ட் 10 மாலையில் அமுதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தகவல் கிடைத்தது. காவல்துறையினரின் விசாரணைக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் வழங்கி முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோவை மாநகராட்சி கன்ட்ரோல் ரூம் பராமரிப்பில் ஊழல்! புதிய முறைகேடு புகார்! பகீர் தகவல்!