அதிமுக கூட்டணி குழம்புன குட்டை.. இபிஎஸ் மீன்-லாம் பிடிக்க முடியாது! சேகர்பாபு விமர்சனம்..!
அதிமுக கூட்டணி ஒரு குழம்பிய குட்டை என்றும் எடப்பாடி பழனிச்சாமி மீன் பிடிக்க முடியாது எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சாலையோரம் மற்றும் கால்வாய் ஓரம் வசிக்கின்ற மக்களுக்காக நிரந்தர வாழ்வாதாரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட 776 குடியிருப்புகள் 3.16 ஏக்கரில் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினின் நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாகவும், விரைவுப் பணிக்கு எடுத்துக்காட்டாகவும் இந்த திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். கட்டுமான பணிகள் தொடங்கி 6 மாதங்களில் எட்டடுக்கு பணிகளை எட்டி உள்ளதாகவும் ஓராண்டுக்குள் மக்களிடம் வீடுகளை ஒப்படைப்போம் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின் இரண்டாம் நாளில் வடவெள்ளி பகுதியில் பேசினார். திறந்த வேனில் நின்றபடி உரையாற்றிய அவர், தற்போதைய திராவிட முன்னேற்றக் கழக அரசு, அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் நிதியைப் பயன்படுத்தி கல்லூரிகள் கட்டுவதாகக் குற்றம்சாட்டினார். கோவில் கட்டுவதற்காக, தெய்வ பக்தி கொண்டவர்கள் உண்டியலில் பணம் போடுகிறார்கள். அந்தப் பணம் கோவிலை அபிவிருத்தி செய்யவும், விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், திமுக அரசு இந்தப் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுகிறது. அரசாங்க நிதியில் இருந்து கல்லூரிகள் கட்ட முடியாதா? கல்வி முக்கியம் தான், ஆனால் அதற்கு அரசு நிதியைப் பயன்படுத்த வேண்டும். கோவில் பணத்தை இதற்கு உபயோகிப்பது சதிச் செயலாகவே மக்கள் பார்க்கின்றனர் என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: மூத்த குடிமக்களுக்கு இனி கவலையே வேணாம்... திமுக ஆட்சியில வந்த வரப்பிரசாதம்! அமைச்சர் சொன்ன ஸ்பெஷல் திட்டம்..!
அறநிலையத்துறை கோவில் பணத்தில் கல்லூரிகளை கட்டி இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி இருந்த நிலையில், அவரது அபத்தமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொளத்தூரில் உள்ள கற்பகாம்பாள் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக கூறினார். மேலும், திமுக கூட்டணியில் குழப்பம் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, அதிமுக கூட்டணி குழம்பிய குட்டை என்றும் அதில் எடப்பாடியால் மீன் பிடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
ஆனால் திமுக, ஓடுகின்ற நதியாக இருப்பதாகவும், எத்தனை தடைகள் வந்தாலும் இந்த நீர்பாய்ச்சலில் அடித்துச் செல்லப்படும் என்றும் கூறினார். 2026 தேர்தலில் தெளிந்த நீரோடையாக மீண்டும் ஆட்சியில் திமுக அமரும் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்வது உறுதி எனவும் தெரிவித்தார். தற்போது பிரச்சாரத்தை நடத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி தனது உடல் நலத்தை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சொன்னா புரிஞ்சுக்கோங்க! கிளாம்பாக்கம் சென்னைக்கு பொக்கிஷம்.. தெளிவாக விளக்கிய சேகர்பாபு..!