×
 

மாநில உரிமைகளை தவெக அரசு விட்டுக்கொடுக்காது! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் வன்னியரசு பதிலடி!

தமிழ்நாட்டின் மாநில உரிமைகளைத் தவெக அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டிற்குரிய மாநில உரிமைகளை எந்தவொரு தார்மீகச் சூழலிலும் அணுவளவும் விட்டுக் கொடுக்கும் அரசு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு அல்ல என்று கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பு அமைச்சரும் சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னியரசு அவர்கள் மிக அழுத்தமான வாதங்களுடன் கூடிய அதிரடிப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான உள்கட்டமைப்பு மற்றும் திட்ட ஆய்வுக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னியரசு, பல்வேறு நடப்பு அரசியல் விவாதங்கள் குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்திருந்த சவால் மற்றும் நெருக்குடிகள் குறித்த கேள்விக்கு விரிவாகப் பதிலளித்த அமைச்சர், மேகதாது அணை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது என்ன நிலைப்பாடோ, அதே நிலைப்பாட்டைத்தான் தற்போதைய தவெக தலைமையிலான அரசும் எடுத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் மாநில உரிமை தொடர்பாகச் சட்டப்பேரவையில் மிகுந்த தெளிவுடன் பேசியுள்ளார். மேகதாது அணைக்கு எதிராகத் தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் ஆதரித்துவிட்டு, தற்பொழுது வெளியில் வந்து இபிஎஸ் இவ்வாறு பேசுவது அரசியல் மரபல்ல என்று சாடினார்.

தொடர்ந்து, கூட்டணியில் விசிகவின் நிலைப்பாடு குறித்து நயினார் நாகேந்திரன் எழுப்பிய விமரிசனங்களுக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர், நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் தவெகவின் மதச்சார்பற்ற சமூக நீதி ஆட்சி தொடரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, ஆளுநரின் கருத்துக்களை அப்படியே வழிமொழியக் கூடியவர்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி ஐந்தாண்டுகள் முழுமையாகத் தொடர வேண்டும் என்ற தார்மீக அக்கறையில்தான் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. எங்களுடைய கால்கள் எப்போதுமே சமூக நீதியின் கால்கள்; அவை இந்த ஆட்சியை உறுதியாகத் தாங்கிப் பிடிக்கும் கால்களாகத்தான் இருக்கும். நாங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்கவில்லை, எங்களின் அரசியல் காலடிகளை அளந்து ஆழமாக வைக்கின்றோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தவெக அரசை எச்சரித்த இபிஎஸ்! காவிரி நீரை உடனே வாங்கலனா அறமே எமனாக மாறித் தண்டிக்கும்!

அதேபோல், விசிக தலைவர் திருமாவளவனுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய கருத்துக்குத் தவெக தரப்பில் சிலர் விமரிசனம் செய்தது குறித்துப் பேசிய அவர், மூத்த தலைவர் அண்ணன் வைகோ மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர் இதுபோன்று பேசுவது ஏற்புடையது அல்ல; அவரைப் போன்ற மூத்த தலைவர்களிடமிருந்து இத்தகைய கருத்துக்கள் வருவது வருத்தமளிக்கிறது என்றார். மேலும், தவெக - பாமக கூட்டணி குறித்த யூகங்களுக்கு அது குறித்துப் பாமக தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், தவெக ஆட்சியில் சமூக நீதித்துறையில் தான் முற்றிலும் சுதந்திரமாகச் செயல்பட முதலமைச்சர் வழிகாட்டியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share