விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!
கீழடி உள்ளிட்ட எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி பெற்று இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கீழடி அகழ்வாராய்ச்சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது, தொல்லியல் ஆய்வுகளைச் சுற்றியுள்ள அரசியல் மற்றும் வரலாற்று மோதலின் ஒரு முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தில் 2014-ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த அகழாய்வு, சங்க கால தமிழ் நாகரிகத்தின் தொன்மையை வலியுறுத்தும் முக்கிய சான்றுகளை வெளிக்கொணர்ந்தது.
செங்கல் கட்டுமானங்கள், கிராஃபிட்டி எழுத்துகள், பானைகள், மணிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொருட்கள் கிடைத்ததால், இது வட இந்திய நாகரிகங்களுக்கு இணையான அல்லது தனித்துவமான தென்னிந்திய நகர நாகரிகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. முதலில் இந்திய தொல்லியல் துறை மேற்பார்வையில் தொடங்கிய இந்த ஆய்வு, பின்னர் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டது.
குறிப்பாக 2017இல் அகழாய்வுக் குழுவின் தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா மீது மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் முதல் பெரும் சர்ச்சை தொடங்கியது. தமிழ்நாடு அரசு, மத்திய அரசு தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அங்கீகரிக்க மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. இதைத் தொடர்ந்து, அகழாய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டும் அவை வெளியிடப்படாமல் தாமதப்படுத்தப்படுவதாகவும், அறிக்கைகளை திருத்தச் சொல்லி திருப்பி அனுப்புவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையும் படிங்க: யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!
இந்த நிலையில், தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது என்றும் கூறினார். அடுத்து மத்திய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலகத்துலயே நன்றிகெட்ட அரசியல்வாதி EPS தான்.. மீண்டும் சீண்டிய OPS ..!