குனிஞ்சு கும்பிடு போட எதுக்கு அதிமுக பெயர்? நான் கேட்கலப்பா... அவங்கதான்..! முதல்வர் ஸ்டாலின் விளாசல்..!
100 நாள் வேலைத் திட்டத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் 100 நாள் வேலை திட்ட மாற்றம் குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுப்பினார். Three Farm Laws, CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி என்றும் கடுமையாக கேள்வி எழுப்பினார்.
100 நாள் வேலை திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள் என்று விமர்சித்தார். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம் என்றும் கேட்டுள்ளார்.
திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை ADMK எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா என்று கேட்டார். உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா என்றும் சரமாரியான கேள்விகளை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஏமாற்றும் திமுக... 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கல... அதிமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்...!
மேலும், வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம் என்றும் இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எனவும் கேட்டுள்ளார். இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் எதற்கு என்று தான் கேட்கவில்லை தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாவம் சும்மா விடுமா? கைகளின் ரத்தக்கறையை எந்த நாடகத்தாலும் துடைக்க முடியாது… சாடிய நயினார்…!