குடும்ப ஆட்சியா? வாரிசு அரசியலா? ஸ்டாலினை 'மன்னர் ஆட்சி' என சாடிய எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக அரசின் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாநிலம் தழுவிய தேர்தல் பிரசாரத்தைச் செய்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். திமுக தலைமையை மிகக் கடுமையாக விமர்சித்த அவர், தற்போதைய ஆட்சி ஒரு 'மன்னர் ஆட்சி'யைப் போல நடைபெற்று வருவதாகக் குற்றம் சாட்டினார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். மக்களாட்சியை விடுத்து, தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் அரசர் ஆட்சியை கொண்டுவர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார். தகுதியே இல்லாத உதயநிதியைத் துணை முதலமைச்சராக்கி, தனக்குப் பிறகு அவரை அரியணையில் ஏற்றத் துடிக்கிறார்" என அவர் சாடினார். தமிழகத்தின் 8 கோடி மக்களைச் சுரண்டி, ஒரு குடும்பம் மட்டும் உலகப் பெரும் பணக்காரர்களாக மாறி வருவதாகவும், திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். மக்களின் வரிப்பணத்தை லூட்டி அடிப்பதற்காகவே இந்த அரசு செயல்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் புயல் மற்றும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளைச் செய்து மக்களைக் காப்பாற்றினோம். ஆனால், திமுக அரசு இன்று மக்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது என்றார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம் ₹2,000 உரிமைத் தொகை, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, முதியோர் ஓய்வூதியம் உயர்வு போன்ற திட்டங்களை எவ்விதத் தடையுமின்றி நிறைவேற்றுவோம் என அவர் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: வட மாவட்டங்களுக்கு டார்கெட்..!! அதிரடியாக களத்தில் இறங்கிய இபிஎஸ்..!! சூடுபிடிக்கும் பிரச்சாரம் ஸ்டார்ட்..!!
முன்னதாக, மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னை துரோகி எனக் குறிப்பிட்டதற்குப் பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்குத் துரோகம் இழைத்தது ஸ்டாலினும் அவரது குடும்பமும்தான் என தெரிவித்தார். அம்பத்தூரில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், குடும்ப ஆட்சிக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என அவர் ஆவேசமாக முழங்கினார்.
இதையும் படிங்க: "பத்து தோல்வி பழனிச்சாமி... மொத்த தோல்வி மோடி!" சென்னை 'Loading 2.0' மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!