தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!
கரூர் சமூகநீதி மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஜோதிமணி எம்.பி., மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை உயர்த்த அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு சமூகநீதி மாணவர் விடுதியில் மாணவர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இன்று விடுதிக்கு நேரில் சென்று அதிரடி கள ஆய்வு மேற்கொண்டார்.
தற்போதைய கடும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை உயர்த்தி, சத்தான தரமான உணவை வழங்கத் தமிழ்நாடு அரசிடம் நேரில் வலியுறுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கரூர் தாந்தோணிமலையில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு சமூகநீதி விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் மிக மோசமாக இருப்பதாக மாணவர்கள் கடந்த வாரம் புகார்களை எழுப்பியிருந்த நிலையில், துறை அமைச்சர் காணொளி காட்சி வாயிலாக மாணவர்களிடம் பேசி குறைகளைக் கேட்டறிந்திருந்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!
இதன் தொடர்ச்சியாக, இன்று விடுதிக்கு நேரில் சென்ற எம்.பி. ஜோதிமணி, மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளைக் கேட்டறிந்ததுடன், தங்கும் அறைகள், சமையலறை மற்றும் வளாகத்தின் சுகாதார நிலையை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கூட தரமற்ற உணவு காரணமாக மாணவர்கள் உணவருந்தாமல் குப்பைத் தொட்டியில் அதிகளவில் உணவைக் கொட்டியிருந்தது வேதனையளிக்கும் விதமாக அமைந்தது.
தொடர்ந்து, விடுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நவீன நூலகம் மற்றும் விளையாட்டு அறையை ஆய்வு செய்த அவர், கூரையில் போதிய தற்காப்புப் பணிகள் முடிக்கப்படாமல் மழைநீர் ஒழுகும் நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். இதனால் மழைக்காலங்களில் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பழுதாகும் பேராபத்து உள்ளதால், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜோதிமணி எம்.பி., தற்போது அரசு விடுதிகளில் ஒரு மாணவருக்கு நாளொன்றுக்கு உணவுக்காக வெறும் ரூ.50 மட்டுமே ஒதுக்கப்படுகிறது; இதன் மூலம் ஒரு வேளை உணவுக்குச் சுமார் ரூ.16.50 மட்டுமே செலவிட முடிகிறது. இன்றைய சந்தை விலைவாசி உயர்வில் இந்தத் தொகையைக் கொண்டு மாணவர்களுக்குச் சத்தான உணவை வழங்குவது சாத்தியமற்றது. எனவே உணவுக் கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என்பதை முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல உள்ளேன்.
மேலும், 55 மாணவிகள் தங்கும் இடத்தில் 100 மாணவிகள் நெரிசலில் தவிப்பதால், கல்லூரிக்கு அருகிலேயே புதிய கூடுதல் விடுதிக் கட்டடங்கள் அமைக்கவும், எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான விளையாட்டு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 27 ஆண்டுகளாக தொடரும் பாதயாத்திரை! வேளாங்கண்ணி நோக்கி பக்தர்களுடன் அமைச்சர் மரிய வில்சன்!