×
 

கொலைக்களமாகும் அரசு நிறுவனங்கள்... கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்..! வலுக்கும் கண்டனம்..!

அரசு நிறுவனங்கள் கொலைக்களமாக மாறி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கொடூர திமுக ஆட்சியில் அரசு நிறுவனங்கள் கொலைக்களமாவதாக குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு உள்ள லட்சணத்தை அடிக்கோடிட்டு காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, எலிகள், நாய்களை உலவ விட்டு, பொதுமக்களின் உயிரைப் பறிக்கும் நோய்களின் கூடாரமாக மாற்றி அரசு மருத்துவமனைகளைச் சீரழித்தது போதாதென்று, தற்போது ரவுடிகளுக்கு இடையிலான சண்டைக்களமாக மாற்றி, அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை அடியோடு பறித்துள்ளது திமுக அரசு என்றும் குற்றம் சாட்டினார். 

தலைநகரில்,அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ள இந்தப் படுகொலை, திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை நிரூபிக்கிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது காவல்துறையின் தோல்வி மட்டும் அல்ல. திமுக அரசின் நிர்வாகத் தோல்வி என்று தெரிவித்தார். எதிர்க்கட்சியினரைப் பழி வாங்க மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தி, தமிழகக் காவல்துறையை முற்றிலுமாக முடக்கி வைத்திருப்பதுதான் திமுக அரசின் ஒரே சாதனை என்றும் விமர்சித்தார். 

 சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கத் தவறிய காவல்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என ரவுடி படுகொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இக்கொடூரச் சம்பவம் அங்கு வரும் நோயாளிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி, அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: வீதிக்கு வீதி கொலை... இந்த விடியா ஆட்சி வேண்டுமா?... விளாசிய அதிமுக..!

ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், கூலிப்படையினர் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுக்குள் நுழைந்து கொடூரக் கொலையை நிகழ்த்தியிருக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். கொலையாளிகள் தப்பி ஓடியதைக் கூட காவல்துறையால் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளை கண்காணித்தல், மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளித்தல் என இரு அடிப்படை பணிகளிலுமே காவல்துறை தோல்வி அடைந்து விட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 

இதையும் படிங்க: கணவருக்கு தாலி பார்சல்… தகாத உறவில் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share