×
 

மறைந்தார் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்.. முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி நேரில் அஞ்சலி..!!

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இல.கணேசனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நாகாலாந்து மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவருமான இல.கணேசன் (வயது 80), உடல்நலக்குறைவால் இன்று  சென்னையில் காலமானார். சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 8ம் தேதி அன்று கால் தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் மாலை 6:23 மணியளவில் உயிரிழந்தார்.

1945ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி தஞ்சாவூரில் பிறந்த இல.கணேசன், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்எஸ்எஸ்) தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பாஜகவில் மாநில செயலர், தேசிய துணைத் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்தவர். 2021இல் மணிப்பூர் ஆளுநராகவும், 2022இல் மேற்கு வங்க ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பு) பணியாற்றினார். 2023 முதல் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார்.

இதையும் படிங்க: நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி..!!

தமிழ் ஆர்வலராகவும், பண்பாளராகவும் அறியப்பட்ட இல.கணேசன், மாற்றுக் கருத்துகளை மதித்து அனைவரிடமும் நட்பு பாராட்டியவர். அவரது மறைவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் இழப்பாக கருதப்படுகிறது. அவரது உடல், சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இல.கணேசனின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், தமிழிசை சௌந்தரராஜன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை, திருமாவளவன், தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். 

இதனிடையே இல. கணேசன் மூளைக்குள் ரத்தக்கசிவு மற்றும் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ச்சியாக சிகிச்சைகளை வழங்கினோம், ஆனால் மூளைக்குள் ஏற்பட்ட ரத்தக்கசிவால் இல. கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இல.கணேசனின் மறைவு செய்தியை கேட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின், உடனடியாக அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின், இல.கணேசனை "மூத்த அரசியல் தலைவர்" எனப் புகழ்ந்து, அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு எனத் தெரிவித்தார். "அவரது அரசியல் பயணமும், பொதுவாழ்வில் அவர் காட்டிய அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவு கூரப்படும்," என ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

இதேபோல் தேநீர் விருந்தில் இருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இல.கணேசனின் மறைவு செய்தியை கேட்டதும் அவரது இல்லத்திற்கு ஓடோடி சென்றார். அங்கு அவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர், ஆளுநரின் கையை பிடித்து அவரது உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இல.கணேசனின் அரசியல் பங்களிப்பு மற்றும் ஆளுநராக அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி, அவரது மறைவு நாட்டுக்கு பெரும் இழப்பு என ஆர்.என்.ரவி தெரிவித்தார். இல.கணேசனின் சகோதரரின் சதாபிஷேக விழாவில் ஆர்.என்.ரவி கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாழும் பெரியாராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share