திமுக லட்சணம் ஊருக்கே தெரியும்... இதுல பகல் கனவு வேற! விளாசிய நயினார் நாகேந்திரன்
அலங்கோல திமுக ஆட்சியை அரியணையிலிருந்து எப்போது அகற்றலாம் என்று மக்கள் காத்துக் கொண்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தனியாக வீட்டில் இருந்த 71 வயது மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போய் உள்ளதும் தெரியவந்துள்ளது. நகைக்காக கொலை செய்தவர் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், மற்றொரு நிகழ்வாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மது போதையினால் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். வீரவநல்லூர் போலீசார் சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த இரு சம்பவங்களை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்பதை இவ்விரு செய்திகளும் நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்தி இருப்பதாக தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பையும் மக்களின் நல்வாழ்வையும் உறுதிசெய்ய முடியாதது மட்டுமன்றி, வரலாறு காணாத அவப்பெயரை தமிழகத்திற்கு தேடித்தந்தது தான் ஆளும் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை என்று கூறினார்.
இதையும் படிங்க: இபிஎஸ் 210 தொகுதி சொன்னா...நான் 220 சொல்லணுமா? உதயநிதி கலகல பேச்சு
ஆளத் தெரியாதவர்கள் கைகளில் சிக்கியுள்ள நமது தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள், பஞ்சமில்லாமல் எங்கும் போதைப் பொருட்கள் கிடைக்கின்றன, காவல்துறையினர் திமுக-வின் கூலிப்படைகள் போல செயல்படுவதாக குறிப்பிட்டார். இந்த லட்சணத்தில் அடுத்த தேர்தலிலும் மக்கள் நம்மை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்ப்பார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ஆனால், திமுக ஆட்சியில் நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் வாழும் தமிழக மக்கள், அடுத்த சட்டமன்றத் தேர்தல் எப்போது வரும், இந்த அலங்கோல ஆட்சியை அரியணையிலிருந்து எப்போது அகற்றலாம் என்று காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணி குழம்புன குட்டை.. இபிஎஸ் மீன்-லாம் பிடிக்க முடியாது! சேகர்பாபு விமர்சனம்..!